ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதலை அமெரிக்காவால் மட்டுமே தடுக்க முடியும்- பாலஸ்தீன ஜனாதிபதி பேச்சு
போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் அக்கறை காட்டும்படி இரு தரப்பையும் மத்தியஸ்தம் செய்யும் கத்தார் வலியுறுத்தி உள்ளது.;
ரியாத்:
காசாவின் ஹமாஸ் அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் போர் 7 மாதங்களாக நீடிக்கிறது. இந்த தாக்குதலில் காசாவில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். காசாவின் பெரும்பகுதியில் தாக்குதல் நடத்தி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள இஸ்ரேல், தனது கடைசி இலக்காக, தெற்கு பகுதியில் உள்ள ரபா நகரில் முழு அளவிலான தாக்குதலை நடத்தப்போவதாக மிரட்டி வருகிறது.
ரபாவில் தஞ்சம் அடைந்துள்ள லட்சக்கணக்கான மக்கள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பயந்து தப்பி செல்வதற்கு வேறு இடம் இல்லாமல் அச்சத்துடன் உள்ளனர். ரபா மீது தாக்குதல் நடத்தினால் உயிரிழப்பு அதிக அளவில் இருக்கும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்படி இரு தரப்பையும் உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளன. குறிப்பாக இஸ்ரேலியப் பணயக் கைதிகள் சிலரை விடுவிக்கும் ஒப்பந்தம் செய்வதற்கான அழுத்தம் அதிகரித்துள்ளது. எனவே, போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் அக்கறை காட்டும்படி இரு தரப்பையும் மத்தியஸ்தம் செய்யும் கத்தார் வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில், ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதலை அமெரிக்காவால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற சிறப்பு கூட்டத்தில் மஹ்மூத் அப்பாஸ் பேசியதாவது:-
ரபா மீதான தாக்குதலை நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிடம் பேசும்படி அமெரிக்காவை கேட்டுக்கொள்கிறோம். இந்த குற்றத்தை இஸ்ரேல் செய்வதை அமெரிக்காவால் மட்டுமே தடுக்க முடியும்.
ரபா மீது ஒரு சிறிய தாக்குதல் நடத்தினால்கூட பாலஸ்தீனிய மக்கள் காசாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். அப்படி நடந்தால், பாலஸ்தீன மக்களின் வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவு நடக்கும்.
பாலஸ்தீனர்கள் ஜோர்டான் மற்றும் எகிப்திற்கு இடம்பெயர்வதில் எனக்கு உடன்பாடில்லை. மேலும், இஸ்ரேல் காசாவில் தனது ராணுவ நடவடிக்கைகளை முடித்தவுடன், பாலஸ்தீன மக்களை மேற்கு கரையிலிருந்து வெளியேற்றி ஜோர்டானுக்குள் செல்வதற்கு கட்டாயப்படுத்த முயற்சிக்கும் என்ற கவலை இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.