ஹிஜ்புல்லா தாக்குதலை எதிர்கொள்ள... தீவிர போர் பயிற்சியில் இஸ்ரேல்

இஸ்ரேலின் உள்துறை அமைச்சகம், அந்நாட்டின் பாதுகாப்பு படை மற்றும் தேசிய அவசரகால கழகம் ஆகியவற்றுடன் சேர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டது.;

Update:2024-07-20 08:49 IST

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில், அந்நாடும், நாட்டு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர்.

எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

இந்த போரில் காசாவுக்கு ஆதரவாக ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பும் செயல்படுகிறது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. அதுபற்றிய தகவலும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இஸ்ரேலின் வடக்கே ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பு எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுகிறது. அதற்கேற்ப, ராக்கெட் தாக்குதல் உள்ளிட்டவை நடந்து வருகிறது. இதனை இஸ்ரேலும் எதிர்கொண்டு வருகிறது. அதற்கு பதிலடியும் கொடுத்து வருகிறது.

இந்த சூழலில், இஸ்ரேலின் உள்துறை அமைச்சகம், அந்நாட்டின் பாதுகாப்பு படை மற்றும் தேசிய அவசரகால கழகம் ஆகியவற்றுடன் சேர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டது.

இந்த பயிற்சியில் உள்துறை அமைச்சகத்தின் மந்திரி மோஷே ஆர்பெல் மற்றும் அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் ரோனன் பெரெட்ஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதனால், அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்த போர் பயிற்சியானது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதிதீவிர போருக்கு பதிலடி தரும் வகையில் தயார்படுத்துவது மற்றும் படைகளை மதிப்பீடு செய்வது உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த போர் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. அரசின் முடிவுகளுக்கு உட்பட்டு எங்களுடைய அமைச்சகத்திற்கு வரும் ஒவ்வொரு விசயமும், உத்தரவின்படியே நடைபெறுகின்றன என்று ரோனன் கூறியுள்ளார். அதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் கடிதம் ஆகியவற்றுக்கேற்ப நாங்கள் செயல்படுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்