லைவ்: - காசா மீதான தரைவழி படையெடுப்புக்கு தயார்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
வடக்கு காசாவில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள்...!
வடக்கு காசாவில் உள்ள மக்கள் 24 மணி நேரத்தில் அப்பகுதியை விட்டு வெளியேறி தெற்கு காசா பகுதிக்கு செல்லும்படி நேற்று மாலை இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது. வடக்கு காசாவில் தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதற்காக காசா எல்லையில் இஸ்ரேல் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு காசாவில் பூமிக்கு அடியில் உள்ள சுரங்க பாதைகளில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் வடக்கு காசாவில் தாக்குதலுக்கு தயாராகி வரும் இஸ்ரேல் அப்பகுதியில் உள்ள மக்கள் தெற்கு பகுதிக்கு செல்லும்படி எச்சரித்துள்ளது. வடக்கு காசாவில் 10 லட்சம் பேர் வசித்து வரும் நிலையில் அவர்களில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி காசாவின் தெற்கு பகுதி மற்றும் எகிப்து எல்லைக்கு செல்லத்தொடங்கியுள்ளனர்.
3 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை:
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,900 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 251 ஆக அதிகரித்துள்ளது.
8ம் நாளாக தொடரும் போர்:
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 8வது நாளாக நடந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர்:
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற ஆயுதக்குழு அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன.
அதேவேளை, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்றே பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்பட மேலும் சில ஆயுதக்குழுக்களும் காசா முனை, மேற்கு கரையில் செயல்பட்டு வருகின்றன.
இதனிடையே, ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கடந்த 7ம் தேதி காலை இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தின. தாக்குதல் தொடங்கிய முதல் 20 நிமிடங்களில் காசா முனையில் இஸ்ரேல் மீது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தரைவழி, வான்வழி, கடல்வழியாக ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். ஆபரேஷன் அல் அக்சா வெள்ளம் என்ற பெயரில் காசா முனை அருகே உள்ள இஸ்ரேலின் தெற்கு பகுதி நகரங்களுக்குள் நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் அங்கு கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர்.
இந்த கொடூர தாக்குதலை பயங்கரவாதிகள் சமூகவலைதளங்களில் நேரலையில் ஒளிபரப்பும் செய்துள்ளனர். வீடுகளுக்குள் புகுந்து இஸ்ரேலியர்களை கொடூரமாக கொலை செய்யும் வீடியோக்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் சமூகவலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்த நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. மேலும், இளம்பெண்ணை கொலை செய்து அவரது உடலை நிர்வாணமாக காரில் கொண்டு செல்லும் வீடியோவும் சமூகவலைதளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், பொதுமக்கள், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர், குழந்தைகள், பெண்கள் என பலரையும் ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பிணைக்கைதிகளை ஹமாஸ் பயங்கரவாதிகள் காசா முனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல் பதிலடி தாக்குதல் தொடங்கியது. இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் சுட்டுவீழ்த்தப்பட்டனர். மேலும், காசாவுடனான எல்லைப்பகுதியை இஸ்ரேல் பாதுகாப்புப்படை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
மேலும், இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் குண்டு மழை பொழுந்து வருகிறது. காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகளும் தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, காசா மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வரும் இஸ்ரேல், வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் பாலஸ்தீன மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் தங்கள் பகுதியை விட்டு வெளியேறி தெற்கு காசாவிற்கு செல்லும்படி இஸ்ரேல் நேற்று மாலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி தொடங்கிய இப்போர் இன்று 8வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.