உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைக்கு இந்தியா உதவ முடியும்: அமெரிக்கா நம்பிக்கை

ரஷியா, உக்ரைனுடன் நட்புறவுடன் உள்ள இந்தியா போன்ற நாடுகள் போரை ஒரு நாள் முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு உதவ முடியும் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

Update: 2023-01-07 01:06 GMT



வாஷிங்டன்,


உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போரானது கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. பல மாதங்களாக நடந்து வரும் இந்த போரானது, இரு தரப்பிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதுடன், சர்வதேச அளவிலும் எதிரொலித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு, உணவு பொருட்கள் பற்றாக்குறை உள்ளிட்டவற்றுக்கு வழிவகுத்து உள்ளது.

இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், எரிவாயு விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. அத்தியாவசிய உணவு பொருட்கள் போதிய அளவு கிடைக்க பெறாமல் டன் கணக்கில் உக்ரைன் துறைமுகத்தில் தேங்கி, வளர்ந்து வரும் மற்றும் பின்தங்கிய நாடுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடை விதித்தது.

எனினும், போரானது தொடர்ந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் தூதரக பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வர வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதனை பிரதமர் மோடியும் ஜி-20 மாநாடு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அளவிலான தளங்களில் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறும்போது, ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுடன் நட்புறவுடன் உள்ள இந்தியா போன்ற நாடுகள், போரை ஒரு நாள் முடிவுக்கு கொண்டு வர கூடிய பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைக்கு உதவ கூடிய நிலையில் உள்ளது.

உக்ரைனில் அமைதி மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பது அவசியம் எனும் இந்தியாவின் நிலைப்பாட்டுடன் அமெரிக்கா ஒத்து போகிறது. உக்ரைன் மக்களுக்கான இந்தியாவின் ஆதரவை நாங்கள் வரவேற்கிறோம்.

இன்றைய காலகட்டம் போருக்கான சகாப்தம் அல்ல என்ற பிரதமர் மோடியின் உறுதியான நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கிறோம். அதுவே ஜி-20 மாநாட்டிலும் எதிரொலித்தது.

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் கொடுமையான தாக்குதல் பற்றிய கேள்விக்கு விடை காணும் வகையில் இந்தியா உள்பட எங்களுடைய கூட்டணி மற்றும் நட்பு நாடுகளுடன் நாங்கள் நெருங்கி பணியாற்றி வருகிறோம்.

உக்ரைனில் நடந்து வரும் அட்டூழியத்திற்கு ரஷியாவை பொறுப்பேற்க செய்வதற்கான தேவையை சர்வதேச சமூகம் உறுதியாக அங்கீகரிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்