இந்தியர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறீர்கள்! இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்திய அமெரிக்க பெண்!
அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
வாஷிங்டன்,
அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண்களை கொடூரமாக தாக்கிய அமெரிக்க பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பெண்கள் ஓட்டலில் இரவு சாப்பிட்டுவிட்டு அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் தங்கள் காரை எடுக்க வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த அமெரிக்க பெண் ஒருவர், இவர்களை வழிமறித்து ஆவேசமாக தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசியுள்ளார்.
அந்த அமெரிக்க பெண்மணி, இந்திய பெண்களை நோக்கி, "நான் இந்தியர்களை வெறுக்கிறேன். இந்த இந்தியர்கள் அனைவரும் ஒரு சிறந்த வாழ்க்கையை விரும்பி அமெரிக்காவிற்கு வருகிறார்கள்.
நான் எங்கு சென்றாலும், நீங்கள் இந்தியர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறீர்கள். இந்தியாவில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருந்தால், நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்? இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்" என்று பேசினார்.
அதன்பின் அவர்களை சரமாரியாக தாக்க தொடங்கினார். இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு இந்த நடந்துள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
"இந்த சம்பவம் டெக்சாஸில் டல்லாஸ் பகுதியில் என் அம்மாவும் அவரது மூன்று நண்பர்களும் இரவு உணவிற்குச் சென்ற பிறகு நடந்தது" என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய பெண்களை அமெரிக்க பெண்மணி தாக்கும் அதிர்ச்சிகரமான வீடியோ, அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய-அமெரிக்க சமூகத்தினரிடையே வைரலாக பரவியது.
இதனை தொடர்ந்து இந்திய பெண்களை தாக்கிய அமெரிக்க பெண்ணை டெக்சாஸில் உள்ள போலீசார் இன்று கைது செய்தனர்.
விசாரணையில், அந்த பெண் மெக்சிகோவை பூர்விகமாக கொண்டவர் எனவும், அவரது பெயர் எஸ்மரால்டா அப்டன் என்பதும், அவர் நான்கு இந்திய-அமெரிக்க பெண்களைக் கொண்ட குழுவைத் தாக்கி, இனரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என்பதும் உறுதியானது.
இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.