காளி தேவியை அவமதிக்கும் வகையில் புகைப்படம் - உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வருத்தம் தெரிவித்தது

உக்ரைன் மக்கள் தனித்துவமான இந்திய கலாச்சாரத்தை மதிக்கிறார்கள் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.;

Update:2023-05-02 11:55 IST

கீவ்,

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவின் மிக முக்கிய துறைமுக நகரமான செவஸ்டோபோலில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கிடங்கு தீப்பிடித்து எரிந்து விண்ணை முட்டும் வகையில் கரும்புகை மேலெழுந்தது.

இந்த தாக்குதலை உக்ரைன் படைகள் தான் நடத்தி இருக்கக் கூடும் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தாக்குதலால் புகை மேலெழும்பிய புகைப்படத்தை வைத்து ஒரு வரைபடத்தை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது.

அந்த படத்தில், கரும்புகையின் மீது அமெரிக்க நடிகை மர்லின் மன்றோவின் பிரபலமான புகைப்படத்தைப் போல் ஒரு பெண்ணின் உருவம் வரையப்பட்டிருந்தது. ஆனால் அந்த பெண் உருவத்தின் நிறம், நீட்டிய நாக்கு, கழுத்தில் இருந்த மண்டை ஓடு மாலை என அனைத்தும் இந்து கடவுளாகிய காளி தேவியை குறிப்பிடுவது போல் உள்ளது என பெரும் சர்ச்சை வெடித்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து உலகம் முழுவதும் இந்துக்கள் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட தொடங்கினர். இதைத் தொடர்ந்து உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில் இருந்ந்து சர்ச்சைக்குரிய பதிவு நீக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த விவகாரத்திற்கு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை மந்திரி எமின் தபாரோவா தனது டுவிட்டர் பக்கத்தில், "இந்து தெய்வமான காளியை தவறாக சித்தரித்தது குறித்து நாங்கள் வருந்துகிறோம். உக்ரைன் மற்றும் அதன் மக்கள் தனித்துவமான இந்திய கலாச்சாரத்தை மதிக்கிறார்கள்.

இந்தியாவின் ஆதரவை உக்ரைன் எப்போது விரும்புகிறது. தவறான சித்தரிப்பு தொடர்பான பதிவு ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடனான பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதில் உக்ரைன் உறுதியாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.


 

Tags:    

மேலும் செய்திகள்