கொரோனா பாதித்த நேபாள அதிபர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

Update: 2022-10-12 01:02 GMT



காத்மண்டு,


நேபாள அதிபராக உள்ள பித்யா தேவி பண்டாரி (வயது 61) உடல்நல குறைவால் காத்மண்டுவில் உள்ள மருத்துவமனையில் கடந்த 7-ந்தேதி சேர்க்கப்பட்டார்.

இதுபற்றி அவரது செயலாளரான பேஷ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. அவருக்கு குளிர் ஜுரம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை காணப்படுகின்றன.

இதனால், அவர் காத்மண்டுவில் உள்ள மகராஜ்கஞ்ச் பகுதியில் அமைந்த திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

அவருக்கு கொரோனா பரிசோதனையும் நடந்தது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டுள்ளார்.

அதனால், கவலையளிக்கும் வகையிலான பிரச்னைகள் ஏற்படாது என நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டது. இதன்பின்பு, உடல்நலம் தேறிய அவர் மருத்துவமனையில் இருந்து பூரண குணம் பெற்று திரும்பினார்.

அவருக்கு இருந்து காய்ச்சல் மற்றும் பிற சுகாதார பிரச்னைகள் தீர்ந்து விட்டன. உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என மருத்துவமனையின் தகவல் அதிகாரி ராம் பிக்ரம் அதிகாரி கூறியுள்ளார்.

நேபாளத்தின் முதல் பெண் அதிபரான அவர், கடந்த 2015-ம் ஆண்டு முதன்முறையாக அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின்பு 2-வது முறையாக 2018-ம் ஆண்டு மீண்டும் அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவி காலம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்