இஸ்ரேலின் சுதந்திரம் பாதுகாக்கப்பட அமெரிக்கா எப்போதும் துணையாக நிற்கும்: பைடன் உறுதி
போரில் அப்பாவி பொதுமக்கள் படுகொலையை தடுக்கும் வகையில் இஸ்ரேலுடன் அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும் என பைடன் மீண்டும் உறுதி கூறியுள்ளார்.;
டெல் அவிவ்,
அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் ஆண்ட்ரூஸ் படை தளத்தில் இருந்து, தனி விமானத்தில் புறப்பட்டு, போரால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலுக்கு இன்று சென்றடைந்த அமெரிக்க அதிபர் பைடனை, அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு, அதிபர் ஈசாக் ஹெர்ஜாக் ஆகியோர் வரவேற்றனர்.
இதன்பின்பு, நெதன்யாகுவுடன் இஸ்ரேல் நிலை பற்றி பைடன் பேசினார். தொடர்ந்து, இஸ்ரேலுக்கான ஆதரவை வெளிப்படையாக அறிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என கூறினார். ஹமாஸ் அமைப்பு, பாலஸ்தீன மக்களின் பிரதிநிதியாக இல்லை என்றும் கூறினார்.
காசா பகுதி மக்களுக்கு உதவி தேவையாக உள்ளது என்று கூறிய பைடன், காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் பற்றி அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழு விசாரணை மேற்கொள்ளும் என உத்தரவிட்டார்.
இதேபோன்று, காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் சம்பவம் பற்றி அறிந்ததும் ஆழ்ந்த வருத்தமடைந்தேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா 2 ஆகியோரை தொடர்பு கொண்டு பைடன் பேசியுள்ளார்.
நெதன்யாகுவுடனான சந்திப்புக்கு பின்னர், போரில் அப்பாவி பொதுமக்கள் படுகொலையை தடுக்கும் வகையில் இஸ்ரேலுடன் அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும் என பைடன் மீண்டும் உறுதி கூறியுள்ளார்.
75 ஆண்டுகளுக்கு முன், இஸ்ரேலின் நிறுவனர்கள், சுதந்திரம், நீதி மற்றும் அமைதி அடிப்படையில் ஒரே நாடாக இஸ்ரேலை அறிவித்தனர்.
இந்த சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் இஸ்ரேலுடன், இன்றும், நாளையும் மற்றும் எப்போதும் அமெரிக்கா துணையாக நிற்கும். அதற்கு நாங்கள் உறுதி கூறுகிறோம் என பைடன் கூறியுள்ளார்.
ஹமாஸ் பயங்கரவா அமைப்பின் கொடூர, மனித தன்மையற்ற தாக்குதலில்... நீங்கள் தனியாக இல்லை என தெரிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று பைடன் வலியுறுத்தி கூறியுள்ளார்.