ஆப்கானிஸ்தானில் 6-ம் வகுப்போடு பள்ளிக்கு பிரியாவிடை : கண்ணீர் வடிக்கும் சிறுமிகள்

மதரசாக்கள் போன்ற மதப்பள்ளிகளில் பெண்கள் படிக்க தடையில்லை என்று ஆப்கான் கல்வித்துறை அமைச்சகம் கூறியுள்ளது.;

Update:2023-12-25 16:25 IST

காபூல்,

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது என்று அப்போது தெரிவித்தனர். பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அறிவிப்புக்கு மாறாக அவர்களது செயல்பாடு இருந்து வருகிறது.

அந்தவகையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் பணிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிறுமிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்ல தடை உள்ளது. பல்கலைக்கழகங்களிலும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டில் பெண்கள் பூங்கா, ஜிம், அழகு நிலையங்கள், காட்சிக் கூடங்கள் செல்ல தலிபான் தடை விதித்துள்ளது.

இந்தநிலையில், 6-ம் வகுப்பு படித்து வரும் சிறுமிகள் இதோடு தாங்கள் மீண்டும் பள்ளிக்குத்திரும்ப போவதில்லை என்று நினைத்து கண்ணீர் வடிக்கிறார்கள்.

டிசம்பர் மாதத்தோடு, பள்ளிகளில் இறுதியாண்டுத் தேர்வு நடத்தப்பட்டு, விடுமுறை அளிக்கப்படும் என்பதால், காபூலில் உள்ள பிபி ரசியா பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த பஹாரா ருஸ்தம் (13), தனது பள்ளி வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கூறுகிறார். இனி ஒருபோதும் அவர் தனது வகுப்பறைக்குத் திரும்பப்போவதில்லை என்பதை நினைத்துக் கதறி அழுகிறார்.

அதனைதொடர்ந்து மற்றொரு மாணவிகள் கூறுகையில், நாங்கள் அனைவரும் ஆறாம் வகுப்பு முடித்துவிட்டோம். அடுத்து ஏழாம் வகுப்பு போக வேண்டும். ஆனால், அது முடியாது. எங்கள் வகுப்பில் பயிலும் சிறுமிகள் அனைவரும் கதறி அழுகிறார்கள்.

இதுபோலவே, மற்றொரு மாணவி, தங்கள் கனவுகள் எல்லாம் வீணாகி போய்விட்டது. இனி நாங்கள் எப்போதுமே சொந்தக் காலில் நிற்க முடியாது. எனக்கு ஆசிரியராக வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால், இப்போது என்னால் படிக்கவே முடியாது, பள்ளிக்கே செல்ல முடியாது என்ற நிலை உள்ளது என்று சொல்லி கண்ணீர் விடுகிறார்.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவது, ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியையே புரட்டிப்போட்டுவிடும் என்று பல்வேறு துறை சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

பெண்களுக்கு கல்வி கற்க தடையா என்ற கேள்வி எழுந்த போது, மதரசாக்கள் போன்ற மதப்பள்ளிகளில் பெண்கள் படிக்க தடையில்லை என்று ஆப்கான் கல்வித்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்