35 ராக்கெட்டுகளை ஏவி ஹிஜ்புல்லா தாக்குதல்; இஸ்ரேல் பதிலடி
இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய யாரவுன் பகுதியிலும் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.;
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர். 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலியாக சிலர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் பிடியில் உள்ள மீதமுள்ள 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், பாலஸ்தீனர்களில் மொத்தம் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகமும் தெரிவித்து இருந்தது. உயிரிழந்தவர்களில் 3-ல் 2 பங்கு மக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஒட்டுமொத்த வெற்றி கிடைக்கும் வரை போரானது தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதனால், எகிப்திய எல்லையையொட்டிய காசாவின் தெற்கு பகுதியில் அமைந்த ரபா நகரை நோக்கி செல்ல திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், அண்டை நாடான லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலின் மவுண்ட் மெரான் பகுதியை நோக்கி ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் 35 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இதனை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் அறிந்து, பதிலடிக்கு தயாரானார்கள்.
இதன்படி, இஸ்ரேலின் போர் விமானங்கள் பறந்து சென்று, ஹன்னியே, ஜிப்சித், பைசரியே மற்றும் மன்சவுரி பகுதியில் அமைந்த ராணுவ தளம் மற்றும் ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பினரின் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய யாரவுன் பகுதியிலும் படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.