காபூலில் குருத்வாரா மீது 2 வெடிகுண்டு தாக்குதல்கள்: 2 பேர் பலி; பலரின் கதி என்ன?
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் குருத்வாரா மீது நடந்த இரண்டு வெடிகுண்டு தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் சிக்கி கொண்டுள்ளனர்.
காபூல்,
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், கர்தே பர்வான் என்ற பகுதியில் சீக்கியர்களின் வழிபாட்டு தலம் என அறியப்படும் குருத்வாரா அமைந்துள்ளது. இதில் இன்று காலை திடீரென பயங்கர வெடிகுண்டு சத்தம் கேட்டது. அங்கு பயங்கரவாதிகளால் இந்திய நேரப்படி, இன்று காலை 8.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.
குருத்வாராவில், சீக்கிய பக்தர்கள் பலர் சிக்கி கொண்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கும், தலீபான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது.
இந்த பகுதியானது ஆப்கானிஸ்தான் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் அதிக அளவில் கூடும் இடம் ஆகும். தாக்குதல் நடந்தபோது 25 முதல் 30 பேர் குருத்வாராவில் காலை பிரார்த்தனைக்காக இருந்தனர். கிடைத்த தகவலின்படி, 3 பேர் குருத்வாராவில் இருந்து வெளியே வந்துள்ளனர். அவர்களில் 2 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். பலர் தப்பி வெளியேறி உள்ளனர்.
இன்னும் 7 முதல் 8 பேர் வரை உள்ளே சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் எண்ணிக்கை உறுதி செய்யப்படவில்லை. துப்பாக்கி சூடு இன்னும் தொடர்கிறது என பா.ஜ.க தலைவர் மன்ஜீந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.
இரண்டு குண்டுவெடிப்புகளும், குருத்வாராவின் 2 நுழைவு வாயில் பகுதிகளில் நடந்துள்ளன. இதுபற்றி அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்துல் நபி தக்கவுர் உள்ளூர் செய்தி நிறுவனங்களிடம் கூறும்போது, கொல்லப்பட்ட 2 பேரில் ஒருவர் சீக்கிய பக்தர். மற்றொருவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த அகமது என்ற பாதுகாவலர் ஆவார் என கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மத்திய வெளிவிவகார அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதேபோன்று மத்திய மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்தியில், குருத்வாரா கர்தே பர்வானில் நடந்த கோழைத்தன தாக்குதல் அனைத்து வகையிலும் கடுமையான கண்டனத்திற்குரியது.
இந்த தாக்குதல் செய்தி அறிந்தபின், நிலைமையை பற்றி தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அந்த சமூக மக்கள் நலமுடன் வரவேண்டும் என்பதே எங்களுடைய முதன்மையான கவலையாக உள்ளது என தெரிவித்து உள்ளார்.