14வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது...!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது.

Update: 2023-10-19 20:33 GMT

Image Courtacy: AFP

ஜெருசலேம்,

Live Updates
2023-10-20 15:04 GMT

ஹமாஸ் பிணை கைதிகளாக பிடித்து சென்றவர்களில் பெரும்பாலானோர் உயிருடன் உள்ளனர் - இஸ்ரேல்

இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் இஸ்ரேலில் 1,403 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலரை பிணை கைதிகளாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் காசாவுக்குள் கொண்டு சென்றனர். பிணை கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.

ஹமாஸ் ஆயுதக்குழு வெளிநாட்டினர் உள்பட 200 பேரை பிணை கைதிகளாக காசாவுக்கு கடத்தி சென்றுள்ளது. ஹமாஸ் தாக்குதலின் போது மாயமான இஸ்ரேலியர்களில் சிலர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹமாசால் காசா முனைக்கு பிணை கைதிகளாக கடத்தி செல்லப்பட்ட 200 பேரில் பெரும்பாலானோர் உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பிணை கைதிகளாக கடத்தி செல்லப்பட்டவர்களில் 10 பேர் குழந்தைகள், 20 பேர் 60 வயதிற்கு மேற்பட்டோர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.  

2023-10-20 14:29 GMT

பலி எண்ணிக்கை:

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,403 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 4 ஆயிரத்து 137 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது.

2023-10-20 13:29 GMT

வான்வழி தாக்குதலை தொடர்ந்து நடந்த வேண்டும் - இஸ்ரேல் முன்னாள் பிரதமர்

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்த வேண்டுமென அந்நாட்டு முன்னாள் பிரதமர் நப்தலி பென்னெட் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இஸ்ரேல் ராணுவம் காசாவில் தரைவழி தாக்குதல் நடத்த அவசரப்படக்கூடாது. ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுரங்கங்களில் பதுங்கி இருப்பதால் இஸ்ரேல் விமானப்ப்படை பலத்தை பயன்படுத்தி வான்வழி தாக்குதலை தொடர்ந்து நடத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

2023-10-20 09:59 GMT

காசா - எகிப்து எல்லை இன்று திறக்கப்படும் என நம்புகிறோம் - உலக சுகாதார அமைப்பு

காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் - இஸ்ரேல் இடையே இன்று 14வது நாளாக போர் நீடித்து வருகிறது. இதனிடையே, காசா முனையின் தெற்கு எல்லையில் எகிப்து அமைந்துள்ளது. காசாவில் இருந்து எகிப்து செல்ல ரபா நகரில் உள்ள எல்லைப்பகுதியே ஒரே வழியாகும். இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதில் இருந்தே காசாவுடனான எல்லையை எகிப்து மூடியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கானோர் காசாவில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

அதேவேளை, போர் தொடங்கிய ஓரிரு நாட்களில் ரபா எல்லை அருகே இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால், காசா முனையில் சிக்கியுள்ள வெளிநாட்டினரும் அப்பகுதியை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், உணவு உள்பட மனிதாபிமான நிவாரண உதவிகள் காசாவுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் நிலவி வருகிறது.

இதனால், உலகம் முழுவதில் இருந்தும் கொண்டுவரப்பட்ட நிவாரண உதவி பொருட்கள் சரக்கு லாரிகளில் ஏற்றப்பட்டு ரபா எல்லைப்பகுதியில் எகிப்துக்குள் நிறுத்தபட்டுள்ளன. எல்லையை திறந்தால் மட்டுமே நிவாரண பொருட்கள் காசா முனைக்கு அனுப்பி வைக்க முடியும்.

அதேவேளை, காசாவுடனான எல்லையை திறக்க எகிப்து, இஸ்ரேல், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தின. மனிதாபிமான உதவிகள் வழங்க எல்லையை திறக்கும்படி எகிப்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேவேளை, எகிப்து எல்லையை திறந்தால் தாக்குதல் நடத்தக்கூடாது என இஸ்ரேலுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் எகிப்தில் இருந்து ரபா எல்லை வழியாக காசாமுனைக்கு மனிதாபிமான உதவிகள் கொண்டுசெல்லப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எகிப்து - காசா இடையேயான ரபா எல்லைப்பகுதி இன்று திறக்கப்படலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இஸ்ரேல் - காசாவில் நடந்து வரும் மோதலால் உலக சுகாதார அமைப்பில் உள்ள நாங்கள் அனைவரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தோம்.

காசா முனைக்கு உயிர்காக்கும் நிவாரண பொருட்களை கொண்டுசெல்ல அனுமதி அளிக்கும்படி தொடர்ந்து கேட்கிறோம். ரபா எல்லைப்பகுதி இன்று திறக்கப்படும் என நாங்கள் நம்புகிறோம். அதிக காலதாமதம் ஏற்பட்டால் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரிக்கும்’ என தெரிவித்துள்ளார். 

2023-10-20 07:42 GMT

காசா அருகே முகாமிட்டு இருக்கும் இஸ்ரேலிய ராணுவ வீரர்களை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்தார். இஸ்ரேலிய வீரர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பெஞ்சமின் நெதன்யாகு, ” சிங்கம் போல ராணுவ வீரர்கள் போரிட்டார்கள். தொடர்ந்து இப்படியேதான் போரிடுவார்கள்” என்றார்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 14-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், காசா மீது தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவத்தினர் தயாராக இருக்கிறார்கள். இதற்காக கிட்டத்தட்ட ஒருவார காலமாக எல்லையில் முகாமிட்டு இருக்கும் ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக  பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.

2023-10-20 06:15 GMT

 காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால், ஒவ்வொரு 15 மணி நேரத்துக்கும் குறைந்தது ஒரு குழந்தையாவது பலி ஆவதாகவும், இதனால் அங்கு உடனடியாக போர் நிறுத்தம் அங்கே அமலாக வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்புக்கான ’சேவ் தி சில்ட்ரன்’ எனற சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

2023-10-20 03:34 GMT

காசாவில் உள்ள பிரதான மருத்துவமனையில் வெறும் 24 மணி நேரம் மட்டுமே தாக்குபிடிக்கும் அளவுக்கு மின்சாரம் இருப்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு மின்சார விநியோகம் இல்லை என்றால் அங்கு சிகிச்சை பெறும் பல நோயாளிகள் இறக்கக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

2023-10-20 01:44 GMT

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது, இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் குறித்தும் பேசினார். ஜோ பைடன் கூறுகையில்,  உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை எப்படி ஏற்க முடியாதோ அதேபோல இஸ்ரேல் மீதான தாக்குதலையும் ஏற்க முடியாது.

ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகள் வெற்றி அடைய விட மாட்டோம். ரஷ்ய அதிபர் புதின் போன்ற கொடுங்கோலர்கள் வெல்லவும் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் இருவருமே அண்டை நாடுகளின் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார்கள். இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்கு ஒதுக்கப்படும் நிதி அளவு இந்த ஆண்டில் இருந்து அதிகரிக்கப்படும். என்று கூறினார். 

2023-10-19 22:51 GMT

இஸ்ரேல் தாக்குதலில் காசா தேவாலய வளாகத்தில் பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தகவல்

காசா சிட்டி,

காசா பகுதியில் உள்ள தேவாலய வளாகத்தில் தஞ்சம் புகுந்த பல இடம்பெயர்ந்த மக்கள், இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் வளாகத்தில் "பெரிய எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் மற்றும் காயங்கள்" ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் கூறியது.

பாலஸ்தீன பகுதியில் போர் மூண்டதால், பல காசா வாசிகள் தஞ்சம் புகுந்திருந்த வழிபாட்டுத் தலத்திற்கு அருகில் உள்ள இலக்கை குறிவைத்து இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாக ஊடகங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இஸ்ரேலிய இராணுவம் தரப்பில் உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

2023-10-19 22:10 GMT

கடந்த 7-ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் வடகொரியாவின் ஆயுதங்கள்: தென்கொரியா புகார்

காசாவின் அல்-அக்லி ஆஸ்பத்திரி மீது குண்டு வீசப்பட்டு 500 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இஸ்ரேல் காரணமில்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க அரசு செய்த ஆய்வின்படி காசா ஆஸ்பத்திரி தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பாகாது என்பது தெரியவந்துள்ளது. கிடைத்த செய்திகள், உளவுத்துறை அறிக்கைகள், ஏவுகணையின் செயல்பாடு, புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் நாங்கள் இதனை உறுதி செய்துள்ளோம்” என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இஸ்ரேல் மீது கடந்த 7-ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் வடகொரியாவின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை வடகெரியா மறுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்