14வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது...!

Update: 2023-10-19 20:33 GMT
Live Updates - Page 2
2023-10-19 21:21 GMT

சொந்த மண்ணிலேயே அகதிகளாகும் காசா மக்கள்

இஸ்ரேலின் தாக்குதல்களால் உயிருக்கு பயந்து சுமார் 10 லட்சம் பேர், அதாவது காசாவின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர், வீடுகளை விட்டு வெளியேறி சொந்த மண்ணிலேயே அகதிகளை போல் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களும் போதுமான அளவு உணவு, குடிநீர் கிடைக்காமல் அல்லல்படுகின்றனர்.

இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காசாவின் அல்-அக்லி ஆஸ்பத்திரி மீது குண்டு வீசப்பட்டு, பெண்கள் சிறுவர்கள் உள்பட 500 பேர் பலியான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சர்வதேச சட்டவிதிமுறைகளை மீறி ஆஸ்பத்திரி மீது வான்தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் மீது குற்றம் சாட்டப்படும் நிலையில், இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்றும், பயங்கரவாதிகள் வீசிய ராக்கெட் குண்டு தவறுதலாக ஆஸ்பத்திரியில் விழுந்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது.

தொடரும் குண்டு மழை

இந்த நிலையில் காசா ஆஸ்பத்திரி மீதான தாக்குதலை தொடர்ந்து, போரை உடனடியாக நிறுத்த வேண்டுமென உலக நாடுகளும், ஐ.நா.வும் வலியுறுத்தின. ஆனால் அதற்கு செவிசாய்க்காத இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் நேற்றும் காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தன. பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட தெற்கு காசாவிலும் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. அங்குள்ள ரபா, கான் யூனிஸ் நகரங்களில் குண்டுகள் வீசப்பட்டதில் குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

2023-10-19 20:48 GMT

காசாவில் உணவு மற்றும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு

காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் இடைவிடாமல் குண்டுகளை வீசி வருகின்றன. இதில் காசா நகரம் சிதைந்து வருகிறது. குண்டு வீச்சில் தரைமட்டாகி கிடக்கும் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை காசா மக்கள் இரவு, பகலாக தேடி வருகின்றனர்.

ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்படுவதால் காசாவில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளும் நிரம்பி வழிகின்றன.

அதே சமயம் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வசதிகள் இல்லாமல் ஆஸ்பத்திரிகள் திண்டாடி வருகின்றன.

இது ஒரு புறம் இருக்க உணவு மற்றும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் காசா மக்கள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு, அசுத்தமான தண்ணீரை குடித்து உயிர் வாழும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

2023-10-19 20:37 GMT

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 14-வது நாளாக தொடரும் போர்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது சுமார் 5 ஆயிரம் ராக்கெட் குண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். அதோடு தரை, கடல் மற்றும் வான் வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர் நூற்றுக்கணக்கானோரை சுட்டுக் கொன்றதுடன், 200-க்கும் அதிகமானோரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர்.

அதை தொடர்ந்து ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரை அறிவித்த இஸ்ரேல் காசா மீது வான்வழி தாக்குதலை தொடங்கியது. அப்போது முதல் இருதரப்புக்கும் இடையில் தீவிரமாக போர் நடந்து வருகிறது. இந்த போர் இன்று 14-வது நாளை எட்டியது.

Tags:    

மேலும் செய்திகள்