லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே வேகமாக பரவும் காட்டுத் தீ: வீடுகள் கருகின
சில இடங்களில் 60 மைல் வேகத்தில் காற்று வீசுவதால் தீப்பிழம்புகள் வேகமாக பரவுகின்றன.;
லாஸ் ஏஞ்சல்ஸ்:
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அருகில் உள்ள பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. மேற்குப் பகுதியில், நேற்று காலை பரவத் தொடங்கிய தீ இரவு வரை கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்தது. மலையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் காட்டுத் தீ சூழ்ந்ததால் பல வீடுகள் கருகின. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதேபோல் லாஸ் ஏஞ்சல்ஸின் வடகிழக்கில் அல்டடேனா மலையடிவாரத்திலும் காட்டுத்தீ பரவியது. கடுமையான காற்று வீசுவதால் தீ வேகமாக பரவி வருகிறது. மலையடிவார குடியிருப்புகளையும் தீ சூழ்ந்ததால் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
ஒரு முதியோர் பராமரிப்பு மையத்தையும் தீ சூழ்ந்தது. அங்கு தங்கியிருந்த முதியோர்களை ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றி, சக்கர நாற்காலிகள் மற்றும் மருத்துவமனை படுக்கைகளுடன் பார்க்கிங் பகுதிக்கு கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் மூலம் வேறு இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
சில இடங்களில் 60 மைல் வேகத்தில் காற்று வீசுவதால் தீப்பிழம்புகள் வேகமாக பரவுகின்றன. தீயணைக்கும் விமானங்கள் கூட பறக்க முடியாத அளவுக்கு காற்று வீசியதால் தீயணைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.