கோவில்பட்டியில் வாலிபர் குத்திக் கொலை

கோவில்பட்டியில் கடன் தகராறில் வாலிபரை குத்திக்கொலை செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-08-20 16:58 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் கடன் தகராறில் வாலிபரை குத்திக்கொலை செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கட்டிட தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுகிராமம் சிவாஜி நகரைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவருடைய மகன் பாலமுருகன் (வயது 30). கட்டிட தொழிலாளி.

இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளது. பின்னர் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பாலமுருகனை விட்டு மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர்களது குழந்தையை பாலமுருகனின் சித்தி ரேவதி வளர்த்து வருகிறார்.

ரூ.10 ஆயிரம் கடன்

கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் குட்டி என்ற வடிவேல் மகன் முத்துராஜ் (39). கட்டிட தொழிலாளியான இவர் பாலமுருகனிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், பின்னர் அதனை திருப்பி வழங்காமல் தாமதித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் மாலையில் பாலமுருகன் கடனை திருப்பி தருமாறு முத்துராஜிடம் கேட்டு தகராறு செய்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து முத்துராஜ், பாலமுருகனின் சித்தி ரேவதியிடம் முறையிட்டார். அப்போது விரைவில் கடனை திருப்பி தருவதாகவும், பாலமுருகன் தன்னை அவதூறாக பேசுவதாகவும் கூறினார்.

சித்தியுடன் தகராறு

இதையடுத்து பாலமுருகனை சித்தி ரேவதி கண்டித்தார். அப்போது ஆத்திரம் அடைந்த பாலமுருகன் சித்தி ரேவதியுடன் தகராறு செய்து அவதூறாக பேசினார். இதுகுறித்து ரேவதி அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை எச்சரித்து அனுப்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் நேற்று முன்தினம் இரவில் முத்துராஜை செல்போனில் தொடர்பு கொண்டு, நான் கடனை திருப்பி கேட்டதை என்னுடைய சித்தியிடம் ஏன் கூறினாய்? என்றும், தைரியம் இருந்தால் நேரில் வருமாறும் கூறி வாக்குவாதம் செய்தார்.

குத்திக்கொலை

பின்னர் இரவில் கோவில்பட்டி புதுகிராமம் சிந்தாமணி நகரில் நின்று கொண்டிருந்த பாலமுருகனை திடீரென்று முத்துராஜ் கத்தியால் வயிற்றில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் முத்துராஜ் தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்த பாலமுருகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முத்துராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்