செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் மிரட்டல்
செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
கொத்தனார்
திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலம் நாராயணபுரத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் தினேஷ்குமார் (வயது 22). கொத்தனாரான இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார்.
இது குறித்த புகாரின்பேரில் அந்த சிறுமியை மீட்ட போலீசார், தினேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த தினேஷ்குமார், மீண்டும் அந்த சிறுமியுடன் பேசி பழகியுள்ளார்.
செல்போன் கோபுரத்தில் ஏறி...
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி, தினேஷ்குமாரிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்குமார், அந்த சிறுமியிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும், இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டியுள்ளார். இருப்பினும் அந்த சிறுமி அவரிடம் பேச மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தினேஷ்குமார் நேற்று காலை 11.30 மணியளவில் நாகமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள தனியார் செல்போன் கோபுரத்தில் ஏறி, சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் அவரை கீழே இறங்கி வருமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் கீழே இறங்கி வரவில்லை.
குதிக்கப்போவதாக மிரட்டல்
இதைத்தொடர்ந்து மணிகண்டம் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவழகன், மணிகண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு உள்ளிட்ட போலீசார் அங்கு வந்து, ஒலிபெருக்கி மூலம் தினேஷ்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கீழே இறங்கி வர மறுத்ததோடு, கீழே குதிக்கப் போவதாக மிரட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கோபுரத்தை சுற்றி பாதுகாப்பு வலை அமைத்தனர். அங்கு ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாலை 3.30 மணிக்கு தினேஷ்குமார் கீழே இறங்கி வந்தார். அவருக்கு போலீசார் தண்ணீர் கொடுத்து, ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவருக்கு போலீசார் மற்றும் டாக்டர்கள் கவுன்சிலிங் கொடுத்து, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.