கருணாநிதி சிலை முன்பு வாலிபர் தர்ணா போராட்டம்

கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கக்கோரி கருணாநிதி சிலை முன்பு வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2023-06-05 11:50 GMT

திருவண்ணாமலை-வேலூர் சாலையில் உள்ள அண்ணா நுழைவு வாயில் அருகில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் சிலை உள்ளது. இந்த நிலையில் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடியை அடுத்த சே.ஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்த பழனி என்பவரின் மகன் சீனுவாசன் (வயது 26) திடீரென கருணாநிதி சிலை முன்பு பதாகையை ஏந்தியபடி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீனுவாசன் கூறுகையில், எனது தந்தை பழனி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு பணியில் இருக்கும் போது அவர் இறந்துவிட்டார்.

தொடர்ந்து கருணை அடிப்படையில் அரசு பணி நியமனம் வழங்கக்கோரி விண்ணப்பித்து உள்ளேன். இதுவரை சுமார் 20 முறைக்கு மேல் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே எனக்கு பணி நியமன ஆணை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து அவரை போலீசார் சமாதானம் செய்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். இதனால் திருவண்ணாமலையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்