'போக்சோ' வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கில் பிணம்

'போக்சோ' வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

Update: 2022-06-16 17:08 GMT

'போக்சோ' வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

'போக்சோ' சட்டத்தில் கைது

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள நடுவகளப்பால் மாரியம்மன் கோவில் மேலத்தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் கார்த்தி(வயது 28). டிப்ளமோ மெக்கானிக் படித்தவர். கடந்த 3 ஆண்டுகளாக கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள முக்கம் கிராமத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். அங்கு அவர் 'போக்சோ' சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வெளி வந்தார். பிறகு கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்னால் 'போக்சோ' வழக்கு சம்பந்தமாக கோழிக்கோடு கோர்ட்டில் ஆஜராகும்படி கார்த்திக்கு சம்மன் வந்தது. இதுகுறித்து சாமிக்கண்ணு கோவையில் இருந்த கார்த்திக்கு தகவல் தெரிவித்தார்.

தூக்கில் தொங்கினார்

அதன்படி சொந்த ஊருக்கு வந்த கார்த்தியிடம், சாமிக்கண்ணு கோர்ட்டில் ஆஜராகும்படி பணமும் கொடுத்து வீட்டில் இருந்து அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் இன்று  அதிகாலை கார்த்தியின் தாய் வீட்டின் பின் பகுதிக்கு வந்து பார்த்தபோது, அங்கு கார்த்தி புளியமரத்தில் சேலையால் தூக்கில் தொங்குவது தெரிய வந்தது. இதனால் பதறிப்போன அவருடைய தாயார் கதறி அழுதார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து கார்த்தியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கார்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து களப்பால் போலீஸ் நிலையத்தில் சாமிக்கண்ணு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

'போக்சோ' வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்