குற்றாலம் மலையில் இருந்து அடித்து வரப்பட்ட குட்டி யானை உயிரிழப்பு
குற்றாலம் மலையில் இருந்து அடித்து வரப்பட்ட மூன்று வயது குட்டி யானை உயிரிழந்தது.
தென்காசி,
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நேற்று தென்தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டியது. கனமழை காரணமாக ஏற்கனவே தென்காசியில் உள்ள குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்கு வெள்ளம் சீறி பாய்ந்தது.
இதன்படி குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த காட்டாற்று வெள்ளம் போல நீர் அங்குள்ள பாலங்களுக்கு அருகே பாய்ந்து செல்கிறது. மேலும், அங்கு அருகே அமைக்கப்பட்டு இருந்த கடைகளிலும் கூட வெள்ள நீர் புகுந்தது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் குற்றாலம் மலையில் இருந்து வெள்ளத்தில் மூன்று வயது குட்டி யானை உயிரிழந்தநிலை அடித்து வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமூல வலைதளங்களில் வெளியான வீடியோ காட்சிகள் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
குற்றாலத்தில், கடந்த 1992 ஆண்டு ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தை நினைவுபடுத்தும் விதமாக 2024ம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.