சென்னை விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்த முயற்சி - ஊழியர் உள்பட 3 பேர் கைது
சென்னை விமான நிலையத்தில் சுமார் ரூ.1.75 கோடி மதிப்புள்ள தங்கத்தை நூதன முறையில் கடத்த முயன்ற ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
சென்னை,
சென்னை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், துபாயில் இருந்து இலங்கை வழியாக சென்னைக்கு வந்த விமான பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஒரு ஆண் பயணி, விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்பாடு பகுதிக்கு அருகே நீண்ட நேரம் காத்திருந்தார்.
சிறிது நேரத்தில் இலங்கை செல்வதற்காக மற்றொரு ஆண் பயணி புறப்பாடு பகுதி அருகே வந்து நின்றார். அப்போது அங்கு நீண்ட நேரமாக காத்திருந்த முதல் நபர், தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்த பந்து போன்ற உருண்டைகளை, 12 அடி கண்ணாடி தடுப்பை தாண்டி வீசினார். அதனை இலங்கை பயணி லாவகமாக பிடித்து, சிறிது தூரத்தில் நின்ற விமான நிலைய ஒப்பந்த ஊழியரிடம் கொடுத்தார்.
இந்த காட்சிகளை ரகசியமாக கண்காணித்துக் கொண்டிருந்த மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், 3 பேரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் கடத்த முயன்ற பந்துகளை உடைத்துப் பார்த்தபோது, அதற்குள் பசை வடிவில் தங்கம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதன்படி அந்த பந்துகளில் மொத்தம் சுமார் 2.5 கிலோ தங்கம் இருந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.1.75 கோடி என கூறப்படுகிறது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், நூதன கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய 2 பேரை தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.