இளைஞர்கள் அதிக அளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும்

இளைஞர்கள் அதிகஅளவில் ரத்ததானம்செய்ய முன்வர வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2023-10-16 18:45 GMT

பாராட்டு சான்றிதழ்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் தேசிய தன்னார்வ ரத்ததானம் மற்றும் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 65 ரத்ததான முகாம் மூலம் 35 முகாம் ஒருங்கிணைப்பாளர்களை கொண்டு 80 ரத்த கொடையாளர்கள் மூலம் 5,238 ரத்த யூனிட் அலகு பெறப்பட்டது.

ரத்ததானம் வழங்கிய கொடையாளர்களின் சேவையை பாராட்டி அவர்களுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசும்போது, விபத்தில் காயம் அடைந்தவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு உதவிட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார்.

உறுதிமொழி ஏற்பு

தொடர்ந்து ரத்தத்தின் தேவையை கருத்தில் கொண்டு தன்னார்வ ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும் போது இனம், மதம், பாகுபாடின்றி உயிர் இழப்பும் ஏற்படா வண்ணம் ரத்த தானம் செய்வேன் என கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் ரத்ததான தன்னார்வலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் கவிதா திருமலை, இணை இயக்குனர்(சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள்) பாலச்சந்தர், துணை இயக்குனர்(சுகாதார பணிகள்) ராஜா, குருதி வங்கி மருத்துவர்கள் விஜயகுமார், சதாவெங்கடேஷ், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மேற்பார்வையாளர் சீனிவாசன், குருதி கொடையாளர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்