லஞ்சம் பெற்ற 4 போலீசாரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

லஞ்சம் பெற்ற 4 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-11-05 02:25 GMT

கோப்புப்படம்

கோவை,

கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது மற்றும் கள் விற்பவர்களிடம் போலீசார் பணம் பெறுவதாக கோவை மாவட்ட காவல்துறைக்கு புகார் வந்தது. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

விசாரணையில் சட்டவிரோதமாக மது மற்றும் கள் இறக்கி விற்றவர்களிடம் லஞ்சமாக பணம் பெற்ற சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

அதன்படி கள் இறக்குபவர்களிடம் பணம் பெற்றதாக பேரூர் மதுவிலக்கு பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் சட்டவிரோதமாக மது விற்ற நபர்களிடம் பணம் பெற்றதற்காக பேரூர் மதுவிலக்கு பிரிவு தலைமைக்காவலர் மதன்குமார், வடக்கிபாளையம் சோதனைச்சாவடி வழியாக செல்லும் லாரி டிரைவர்களிடம் பணம் பெற்றதற்காக தலைமை காவலர் செல்வகுமார் மற்றும் போலீஸ்காரர் பஞ்சலிங்கம் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் மது விற்பவர்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களிடம் பணம் பெறும் போலீசார் மீதான புகார்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்