தி.மு.க. அரசின் அலட்சியத்தால் இரண்டு பெண் போலீசார் உயிரிழப்பு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
பணியின்போது உயிரிழந்த பெண் போலீசார் இருவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும் காவல்துறையினருக்கு, குறிப்பாக பெண் போலீசாருக்கு எந்தவித வசதியும் செய்து தராத இந்த தி.மு.க. அரசின் அலட்சியத்தால் இரண்டு பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாதவரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ மற்றும் பெண் காவலர் நித்யா ஆகிய இருவரும் ஒரு வழக்கு தொடர்பாக குற்றவாளியைப் பிடிக்க செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சென்றுள்ளனர். மதுராந்தகத்தில் இருவரும் இருசக்கர வாகனத்தில் குற்றவாளிகளைத் தேடிச் சென்றபோது சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இருந்து அவர்கள் இருவரும் எப்படிச் சென்றார்கள் என்று தெரியாத நிலையில் மதுராந்தகம் காவல்துறையினரும் அவர்கள் இருவருக்கும் வேண்டிய வாகன வசதிகளை செய்து தராதது கண்டிக்கத்தக்கதாகும்.
இந்த அரசின் அஜாக்கிரதையால் பணியின்போது உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென்றும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமென்றும், இனிமேலும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினின் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.