திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மாட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுமித்ரா (வயது 37). இவருக்கும், நத்தத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (35) என்பவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சுமித்ரா, திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு வந்தார். அதை பார்த்த பாலகிருஷ்ணன், சுமித்ராவிடம் சென்று பேச்சு கொடுத்தார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் கத்தியால், சுமித்ராவை குத்திவிட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சுமித்ராவை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.