கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
குளிக்கும் வீடியோவை இணையதளத்தில் பரப்புவேன் என மிரட்டி என்ஜினீயரிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படிக்கும் 20 வயதான மாணவி, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நான், சென்னை திருமங்கலத்தில் வாடகை வீட்டில் தங்கி, என்ஜினீயரிங் படித்து வருகிறேன். எனது வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் குடியிருக்கும் 26 வயது இளம்பெண்ணுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் பழகி வந்தோம். அவர் அவசர உதவி என கேட்டதின் பேரில் ரூ1,00,000 மற்றும் ஒரு பவுன் நகையை அவரிடம் கொடுத்தேன்.
அவருடன் பழகியதால் எனக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது. ஒரு நாள், நாங்கள் இருவரும் சேர்ந்து மது அருந்தினோம். திடீரென அந்த பெண், எனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததுடன், தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும்படி வற்புறுத்தினார்.
ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறி அவருடன் பழகுவதை நிறுத்தி விட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், எனக்கு தெரியாமல் நான் குளிக்கும் போது எடுத்த வீடியோவை எனக்கு அனுப்பி, என்னை மீண்டும் ஓரினச்ேசர்க்கைக்கு அழைத்தார்.
அவர் எல்லை மீறி போவதால் நான் வீட்டை காலி செய்ய முயற்சி செய்தேன். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அந்த பெண், நான் குளிக்கும் வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்பிவிடுவேன் எனவும், என்னுடன் பழகுவதை தவிர்க்கக்கூடாது. இல்லை எனில் நீ விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டினார்.
என்னை அவமானப்படுத்துவதுடன், என் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்துவதாக கொலை மிரட்டல் விடுத்த அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் என்ஜினீயரிங் மாணவி அளித்த புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 26 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஆபாசமாக பேசுவது, கொலை மிரட்டல் விடுத்தது உள்பட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கைதான இளம்பெண்ணை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதியிடம் அவர், "எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. என்ன செய்கிறேன் என்றும் புரியவில்லை. என்னை மன நல ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும்" என்று கூறி நீதிபதி முன் கதறி அழுதார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அந்த பெண், அயனாவரம் பகுதியில் உள்ள மனநல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.