ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்

ஆதிதிராவிடர் நலத்துறையில் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-07 14:09 GMT

ஆசிரியர் பணியிடங்கள்

திருவள்ளூர் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு 19 காலியிடங்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 4 காலியிடங்களும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 4 காலியிடங்களும் என மொத்தம் 27 காலி பணியிடங்கள் உள்ளது. காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலம்) அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

தொகுப்பூதிய முறையில்

இந்த காலிப் பணியிடங்கள் பள்ளி மேலாண்மை குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்பட உள்ளது. தேர்வு செய்யப்படவுள்ள பணியிடங்களுக்கான இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12 ஆயிரம், பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15 ஆயிரம், முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.18 ஆயிரம் வீதம் மாத தொகுப்பூதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான கல்வி தகுதி, ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

11-ந்தேதிக்குள்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்படும் நாள் முதல் 2024 ஏப்ரல் மாதம் வரையிலும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்படும் நாள் முதல் 2024 பிப்ரவரி மாதம் வரையிலும் மட்டுமே தற்காலிக பணி நியமனம் செய்யப்படுவர்.

விருப்பமுள்ளவர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி அந்தந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது எழுத்துப்பூர்வமான விண்ணப்பத்தினை உரிய கல்வி தகுதி சான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக முகவரியில் வரும் 11-ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்