நாராயண பெருமாள் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. குடமுழுக்கு விழா வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

Update: 2023-09-14 18:45 GMT

திருவெண்காடு:

நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. குடமுழுக்கு விழா வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

நாராயண பெருமாள் கோவில்

திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமத்தில் மணிமாட கோவில் என அழைக்கப்படும் நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். மேலும் ஆண்டுதோறும் 11 பெருமாள்கள் இந்த கோவிலில் தான் எழுந்தருளி கருட சேவை உற்சவம் நடைபெறும். இந்த பெருமாளை பிரம்மா, நாரதர், இந்திரன் மற்றும் மதங்க முனிவர் ஆகியோர் வழிபட்டதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

திருமங்கை ஆழ்வார், மாமுனிகள் உள்ளிட்ட ஆழ்வார்கள் இந்த பெருமாளை பற்றி பாசுரங்கள் இயற்றியுள்ளனர். இவரை வழிபட்டால் பல்வேறு சிறப்புகள் ஏற்படும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் கோபுரங்கள், சன்னதிகள், ராஜகோபுரம் மற்றும் மதில் சுவர் திருப்பணிகள் முடிவடைந்து வருகிற 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு விழா நடக்கிறது.

யாகசாலை பூஜைகள்

இதனையொட்டி நேற்று மணிகர்ணிகை ஆற்றிலிருந்து பட்டாச்சாரியார்கள் புனித நீரை எடுத்து வந்தனர். இதனைதொடர்ந்து வாஸ்து சாந்தி, திவ்ய பிரபந்தம், திக்பந்தனம், வேத பாராயணங்களுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

காலை முதல் கால யாகபூஜை, மாலை இரண்டாம் கால யாகபூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) மூன்று மற்றும் நான்காம் கால யாகபூஜைகள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், கணக்கர் ரத்தினவேல், மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்