சென்னையில் அடுத்த மாதம் உலக மகளிர் டென்னிஸ் போட்டி-அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னையில் அடுத்த மாதம் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறுவதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

Update: 2022-08-26 19:08 GMT

சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உலக மகளிர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் 12-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 150 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான பணிகளை தமிழக அரசும், தமிழக டென்னிஸ் சங்கமும் இணைந்து மேற்கொண்டு வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தை புதுப்பொலிவுடன் மாற்றுவதற்காக ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன தொழில்நுட்பத்துடன் மின்விளக்குகள் சர்வதேச தரத்துடன் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. நுங்கம்பாக்கம் மைதானத்தை புதுப்பிப்பதற்காக ரூ.1½ கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் தயார்படுத்தப்பட்டு வரும் சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம் வருகிற 8-ந் தேதிக்குள் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும். உலக வெப்பமயமாதல் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. எனவே நீர்நிலைகளை பாதிக்காதவாறு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும். வனப்பகுதியில் அந்நிய மரங்களை அகற்றுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். குறிப்பாக நமது பாரம்பரிய மூலிகை செடிகள் வெளிநாட்டு செடிகளின் பாதிப்புகளால் அழியக்கூடிய சூழ்நிலை உள்ளது. அதனால் அதை தடுப்பதற்கும் வெளிநாட்டு செடிகள் தமிழகத்தில் வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தைல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எனவே தைல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்