உலக இதய தினம்: அரசு ஆஸ்பத்திரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சார்பாக இதய நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

Update: 2022-09-30 09:12 GMT

உலக இதய தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆஸ்பத்திரியின் டீன் டாக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார். இதில் மருத்துவ மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு இதய நோய் குறித்த விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். டீன் டாக்டர் ஜெயந்தி, ஆஸ்பத்திரியில் பணிபுரியும் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இதய நோய் குறித்தும், அவற்றை வராமல் தடுப்பது குறித்தும் விளக்கம் அளித்தார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இதேபோல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில், இதயவியல் துறை சார்பில், ஆஸ்பத்திரி வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் மணி தலைமையில் நடைபெற்ற பேரணியில், புகைப்பிடித்தலை தவிர்ப்போம், சீரான உடல் எடையை பராமரிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நல்ல உணவு, தினந்தோறும் உடற்பயிற்சி, நல்ல உறக்கம், மன உளைச்சல் இல்லாமல் இருப்பது போன்றவற்றை கடைப்பிடித்தாலே, இதய பாதிப்பு இல்லாமல் வாழலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்