குடும்பத் தகராறில் மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - திருவள்ளூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு

குடும்பத் தகராறில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவள்ளூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2022-05-28 12:45 GMT

திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் குப்பத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 43). இவரது மனைவி பத்மா (42). இவர்களுக்கு 14 மற்றும் 17 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பத்மா கணவரை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கணவன் நாகேந்திரன் கடந்த 2015-ம் ஆண்டு ஆவடி ரெட்டிப்பாளையம் சின்னம்மன் கோவில் தெருவில் உள்ள மனைவி பத்மா வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்துமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் குடும்பம் நடத்த வர முடியாது என மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

அதைத் தொடர்ந்து நாகேந்திரன் பத்மா வீட்டின் பின்புறமாக நின்று கொண்டு அவரை அழைக்கவே வந்ததும், இறுக்கமாக பிடித்து கொண்டு பிளேடால் கழுத்தை அறுத்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து ஆவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கே.அமுதா ஆஜராகி வாதாடினார். இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்திரா தேவி மனைவி பத்மாவை பிளேடால் அறுத்து கொலை செய்த சம்பவம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து நாகேந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இதனையடுத்து கொலை குற்றவாளி நாகேந்திரன் புழல் சிறைக்கு கொண்டு அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்