விபத்தில் தொழிலாளி படுகாயம்: இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2022-11-25 18:45 GMT

தேவாரம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் சசிக்குமார் (வயது 29). கூலித்தொழிலாளி. கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் இவர் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதில் பாதிக்கப்பட்ட சசிக்குமார் இழப்பீடு கேட்டு தேனி மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு ரூ.9 லட்சத்து 29 ஆயிரத்து 698-ஐ 2 மாத காலத்தில் அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. ஆனால், குறிப்பிட்ட காலத்தில் இழப்பீடு வழங்காததால், தேனியை சேர்ந்த வக்கீல் ராஜாமுகமது மூலமாக தேனி கோர்ட்டில் சசிக்குமார் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில், சசிக்குமார், அவருடைய வக்கீல், கோர்ட்டு பணியாளர்கள் தேனி புதிய பஸ் நிலையத்துக்கு நேற்று வந்தனர். அங்கிருந்து போடி செல்ல தயாராக நின்ற அரசு பஸ்சை அவர்கள் ஜப்தி செய்தனர். பின்னர் ஜப்தி செய்யப்பட்ட பஸ்சை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்துக்கு அவர்கள் கொண்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்