ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

திருவையாறு அருகே நண்பரை காப்பாற்ற முயன்ற போது ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார

Update: 2023-07-16 21:05 GMT

திருவையாறு:

திருவையாறு அருகே நண்பரை காப்பாற்ற முயன்ற போது ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.

நண்பர்கள்

தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த சாத்தனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது55). அதே பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (40). இருவரும் கூலி தொழிலாளிகள். நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை சாத்தனூர் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

இவர்கள் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது வேலுச்சாமியை தண்ணீர் இழுத்துச் சென்றுள்ளது. அதை பார்த்த செந்தில்நாதன், நண்பரை காப்பாற்ற முயன்றார். அப்போது 2 பேரும் சுழலில் மாட்டிக்கொண்டனர்.

கயிறு மூலம் காப்பாற்றினர்

இதை பார்த்து கரையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அவர்களை கயிறு மூலம் காப்பாற்ற முயன்றனர். இதில் வேலுச்சாமி பொதுமக்கள் வீசிய கயிற்றை பிடித்துக் கொண்டார். ஆனால் செந்தில்நாதன் கயிற்றை பிடிக்க முயன்ற போது அவரை தண்ணீர் அடித்து கொண்டு சென்றது.

கரைக்கு வந்த வேலுச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சாலை மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து நேற்று காலை திருவையாறு தீயணைப்பு வீரர்கள், திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடினர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகம் சென்றதால் தண்ணீரை குறைக்க கோரி சாத்தனூர் மெயின் ரோட்டில் செந்தில்நாதனின் உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

போக்குவரத்து பாதிப்பு

தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமதாஸ், திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் மருவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஆற்றில் தண்ணீரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த மறியலால் அந்த பகுதியில்் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உடல் கரை ஒதுங்கியது

இதற்கிடையே செந்தில்நாதன் உடல் வடுகக்குடி முனியாண்டவர் கோவில் அருகே காவிரி ஆற்றின் ஓரம் கரை ஒதுங்கி கிடந்தது. சம்பவ இடத்திற்கு வந்த மருவூர் போலீசார், செந்தில்நாதன் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்

இதுதொடர்பான புகாரின்பேரில் மருவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பனை காப்பாற்ற முயன்ற போது ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்தபகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்