மகளிர் உரிமைத்தொகை பெறும் குடும்ப தலைவிகளுக்கு ஏ.டி.எம்.கார்டு

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை பெறும் குடும்ப தலைவிகளுக்கு வங்கி ஏ.டி.எம். கார்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார்.

Update: 2023-09-15 19:04 GMT

மகளிர் உரிமை திட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை பெறும் குடும்ப தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டைகள் வழங்கும் விழா தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.பி., வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பி.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குடும்ப தலைவிகளுக்கு வங்கி ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் பெண்களின் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை நிறைவேற்றி உள்ளார். மாதந்தோறும் ரூ.1,000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 3,92,385 விண்ணப்பங்கள் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெற்று பரிசீலிக்கப்பட்டு, தற்போது குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.

மகளிர் சுயஉதவி குழு

தர்மபுரி மாவட்டத்தில் தான் கலைஞர் முதன் முதலில் 1989-ம் ஆண்டு ஏழை எளிய மகளிரை கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களை தொடங்கி வைத்தார். தற்போது இந்த திட்டம் வளர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் 14,105 மகளிர் சுய உதவிக்குழுக்களில் 1,69,254 மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடந்த ஆண்டு 21,048 மகளிர் பயனடையும் வகையில் ரூ.116.96 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு வங்கிகள் மூலம் மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது தர்மபுரி மாவட்டத்தில் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், மொத்தம் 7.50 கோடி பேருந்து பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு, சிறப்பான திட்டமாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, உதவி கலெக்டர்கள் கீதாராணி, வில்சன் ராஜசேகர், மாநில கைம்பெண் நலவாரிய உறுப்பினர் ரேணுகாதேவி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மாது சண்முகம், தடங்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்