கலைஞரின் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ்குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்ப பதிவுக்கான டோக்கன்கள் வழங்கும் பணிகலெக்டர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்
கலைஞரின் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்ப பதிவுக்கான டோக்கன்கள் வழங்கும் பணியை கலெக்டர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி,
தமிழ்நாடு அரசின் சார்பில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின்கீழ் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதோடு இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் வகையில் விண்ணப்பத்தை, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் முகாம் நடைபெறுவதற்கு முன்பாகவே வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக விண்ணப்பங்கள் மற்றும் அதற்கான விண்ணப்பங்கள் பதிவுக்கான டோக்கன் வினியோகிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. இதில், நிறைமதி கிராமத்தில் வீடு வீடாக சென்று டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கும் பணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிறைமதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற இருக்கும் விண்ணப்பம் பதிவு முகாமில் போதிய வசதிகள் உள்ளதா என்றும் ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் ஷ்ரவன் குமார் கூறுகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் பதிவுக்கு அனைத்து ஊராட்சிகளிலும் பல்வேறு முகாம்கள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவேற்றம் செய்யும் வகையில், இப்பணிகளுக்கு கூடுதல் எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தகுதியுடைய நபர்கள் யாரும் விடுபடாத வகையில் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜலட்சுமி, உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மீனா அருள், கள்ளக்குறிச்சி தாசில்தார் சத்தியநாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.