நீலகிரியில் மகளிர் உரிமைத்தொகை திட்டம்

நீலகிரியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-15 20:00 GMT

ஊட்டி

நீலகிரியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

மகளிர் உரிமைத்தொகை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை, அண்ணா பிறந்தநாளான நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் தொடங்கி வைத்தார். இதேபோல் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே நஞ்சநாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை தாங்கி, 1,598 பெண்களுக்கு கையேடுகள் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

இது சாதாரண திட்டமல்ல, சமூக நீதி திட்டமாகும். அதாவது ஒரு ஊரில் பணக்காரனுக்கு கிடைக்கும் எல்லா விஷயங்களும் சாமானியர்களுக்கும் கிடைக்க செய்வதுதான் சமூக நீதியாகும். பல ஆண்டு காலமாக வீட்டில் முடங்கி கிடந்த பெண்கள் தற்போது குடும்பத் தேவையை நிறைவேற்றும் வகையில் வேலைக்கு செல்கின்றனர்.

எனவே, நீலகிரி முழுவதும் கிராமங்களுக்கு செல்லும் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கடிதம் கொடுத்து உள்ளேன்.

16 மினி பஸ்கள்

தமிழக முழுவதும் புதிதாக 2,000 பஸ்கள் வரவுள்ளது. இதில் நீலகிரிக்கு 16 பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் பணிகள் முடிந்து விட்டது. மலை மாவட்டம் என்பதால் மினி பஸ்களாக வாங்கப்பட உள்ளது. பச்சை தேயிலை விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது. அப்படி இருந்தால் முதல்-அமைச்சர் தகுதியான விலையை நிர்ணயம் செய்து கொடுத்து விடுவார். மத்திய வர்த்தகத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேயிலை வாரியம் தான் விலை நிர்ணயம் செய்ய முடியும். எனவே, வர்த்தகத் துறைக்கு கடிதம் எழுத தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களை சென்றடைய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கலெக்டர் அருணா, போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் உமா மகேஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஆர்.டி.ஓ. மகாராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சாம்சாந்தகுமார், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், நந்தகுமார், தாசில்தார் சரவணகுமார், நஞ்சநாடு ஊராட்சி தலைவர் சசிகலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நடமாடும் ஏ.டி.எம்.

இதேபோல் இளித்துறையில் விழா நடந்தது. இத்திட்டத்தின் கீழ் தேர்வான பெண்களுக்கு நேற்று முன்தினம், நேற்று வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. இந்தநிலையில் விழாவில் கலந்துகொண்ட பயனாளிகளுக்கு உடனடியாக பண பட்டுவாடா செய்ய ஏதுவாக, நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நடமாடும் ஏ.டி.எம். வாகனம் விழா நடந்த இடங்களுக்கே கொண்டு வரப்பட்டது. இதனால் பயனாளிகள் சிரமமின்றி உடனடியாக ஏ.டி.எம். மூலம் பணம் எடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்