கொடிவேரி அணையில் பாசி படர்ந்த பாறைகளால் வழுக்கி விழும் பெண்கள்; பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கோரிக்கை

கொடிவேரி அணையில் பாசி படர்ந்த பாறைகளால் பெண்கள் வழுக்கி விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2023-09-17 22:27 GMT

கடத்தூர்

கொடிவேரி அணையில் பாசி படர்ந்த பாறைகளால் பெண்கள் வழுக்கி விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கொடிவேரி அணை

கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணை உள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை ஆகிய வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். அங்கு தடுப்பணையில் இருந்து கொட்டும் அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை தினங்களிலும் அணையில் குளிப்பதற்காக சுற்றலா பயணிகள் திரளாக வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி விழா காரணமாக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் நேற்று கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். ஏற்கனவே காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் கொடிவேரி அணையில் இருந்து வெள்ளியை உருக்கி கொட்டுவதைபோல விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

பெண்கள் காயம்

அணையில் தண்ணீர் கொட்டும் அழகையும் ரசித்த சுற்றுலா பயணிகள், பூங்கா வளாகத்தில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவை குடும்பத்துடன் சாப்பிட்டு பொழுது போக்கினர். பூங்கா வளாகத்தில் உள்ள ஊஞ்சல், சீசா விளையாடி சிறுவர்-சிறுமிகள் மகிழ்ந்தனர். அங்குள்ள 'வியூ பாய்ண்ட்' பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள், பவானி ஆற்றின் ரம்மியமான காட்சிகளை பார்த்து ரசித்ததுடன், உடன் வந்தவர்களுடன் குழு புகைப்படமும், 'செல்பியும்' எடுத்து கொண்டனர்.

இதற்கிடையே கொடிவேரி அணையில் குளிக்கும் இடத்தில் பாசி படர்ந்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். அணையில் குளிக்கும் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக செல்வதற்காக சிறிய பாலம் கட்டப்பட்டு உள்ளது. அதன் முடிவில் உள்ள பாறைகளில் பாசி படர்ந்து கிடக்கிறது. ஏற்கனவே அணையில் தண்ணீர் அதிகமாக கொட்டுவதால் பெண்களால் கம்பிகளை பிடித்து குளிக்கும் இடத்துக்கு நடந்து செல்லவே மிகவும் சிரமப்பட்டனர். பலர் தண்ணீரின் வேகத்துக்கு தாக்குபிடிக்க முடியாமல் வழுக்கி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே பெண்கள் குளிக்கும் இடத்தில் படர்ந்துள்ள பாசிகளை அகற்றி சுகாதாரமாக வைத்திருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இதுகுறித்து அணையில் குளிக்க வந்த பெண்கள் கூறியதாவது:-

கொடிவேரி அணைக்கு வரும் அனைவரிடமும் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதற்குரிய பராமரிப்பும் செய்யப்பட வேண்டும். தண்ணீர் அதிகமாக செல்வதால் பெண்களால் அணையின் நடுப்பகுதிக்கு துணிச்சலாக சென்று குளிக்க முடியவில்லை. அங்குள்ள பாறைகளில் பாசி அதிகமாக படர்ந்து இருப்பதால், எங்கள் கண் முன்னே பெண்கள் பலர் வழுக்கி கீழே விழுந்து காயம் அடைந்தனர். நல்லவேளையாக கீழே விழுந்தவர்களை அங்கிருந்தவர்கள் பிடித்து கொண்டனர். இல்லையென்றால் தண்ணீரிலேயே அடித்து செல்லும் அபாயம் உள்ளது. குறிப்பாக பெண்கள் அதிகமாக குளிக்கும் பகுதியில்தான் வழுக்கு பாறைகள் அதிகமாக உள்ளன.

சுற்றுலா பயணிகள் பலர் கொடிவேரி அணை தண்ணீரில் மூழ்கி இறந்து உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். கொடிவேரி அணை வளாகத்தில் ஒலி பெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதிகாரிகள், அணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டியது கடமையாகும். குளிக்கும் பகுதிகளில் உள்ள பாசிகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்