சென்னை: பெண் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்டது ஏன்? கைதானவர் பரபரப்பு தகவல்

மணிகண்டன் தீபாவை அழைத்து சென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று இரவு உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.;

Update:2024-09-19 17:23 IST

சென்னை,

சென்னை கிழக்கு கடற்கரை சாலை துரைப்பாக்கத்தில் இளம்பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்து துண்டு துண்டாக உடலை வெட்டி சூட்கேசில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கையைச் சேர்ந்த மணிகண்டன் என்பரை போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பெண் கொலையில் பரபரப்பான தகவல்கள் வெளியானது.

அதில், கொலையுண்ட பெண் மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த தீபா (வயது 30) என்பது தெரியவந்துள்ளது. தீபா பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகர் 4வது தெருவில் தனது அக்காள் வீட்டில் வசித்து வரும் சிவகங்கையை சேர்ந்த மணிகண்டன் பெண் சபலம் கொண்டவராக இருந்து வந்துள்ளார்.

தனது அக்கா குடும்பத்துடன் வெளியில் சென்று விட்ட நிலையில் மணிகண்டன் தீபாவை அழைத்து சென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று இரவு உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக தீபாவிடம் ரூ.18 ஆயிரம் தருவதாக கூறியிருந்த மணிகண்டன் ரூ.12 ஆயிரம் மட்டுமே தருவேன் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நள்ளிரவில் மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து தீபாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் மண்டை உடைந்து தீபா துடிதுடித்து உயிரிழந்தார்.

இதனால் பயந்து போன மணிகண்டன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தீபாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வெளியில் கொண்டு போய் வீசியுள்ளார். பின்னர் எதுவும் தெரியாதது போல வீட்டுக்கு சென்று தூங்கி உள்ளார்.

அதன்பிறகே இன்று காலை 6 மணி அளவில் துரைப்பாக்கம் பார்த்த சாரதி நகர் 1வது தெருவையொட்டிய பகுதியில் வீசப்பட்ட சூட்கேசை அதே பகுதியை சேர்ந்த மாரி என்பவர் பார்த்துள்ளார். அவர்தான் அந்த வழியாக ரோந்து சென்ற காவலர் பொன்னு சாமியை அழைத்து காட்டி இருக்கிறார். இதன் பிறகே போலீசார் நேரில் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இன்று அதிகாலை 3.30 மணி அளவில்தான் மணிகண்டன் தீபாவின் உடலை சூட்கேசில் அடைத்து வீசிவிட்டு சென்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகரை சுற்றியுள்ள பகுதிகள் ஐ.டி.நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகும். 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் அங்கு வசித்து வருகிறார்கள். இப்படி பரபரப்பாக காணப்படும் குடியிருப்பு பகுதியில் சூட்கேசில் அடைத்து பெண்ணின் உடல் வீசப்பட்ட சம்பவம் அங்கு வசித்து வரும் மக்கள் மத்தியல் கடும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தீபா பெயரை சொல்லி நேற்று இரவு துரைப்பாக்கம் பகுதிக்கு அவரது உறவினர்கள் சிலர் தேடி வந்துள்ளனர். அவர்கள் யார்? என்பதை கண்டு பிடித்த போலீசார் அதன் மூலமாக கொலையுண்ட பெண்ணை அடையாளம் கண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு சூட்கேசில் இருந்து பெண்ணின் உடலை மீட்டபோது அதனை வேடிக்கை பார்க்க அப்பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடலை பார்த்து அதிர்ச்சியில் மூழ்கினார்கள். சென்னை மாநகர் முழுவதுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக குற்றவாளியை உடனடியாக கைது செய்வதற்கு கண்காணிப்பு கேமரா காட்சிகள் கை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்