மகளிர் சுயஉதவிக்குழு கைவினைப்பொருட்கள்ரூ.52 லட்சத்துக்கு விற்பனை

மகளிர் சுயஉதவிக்குழு கைவினைப்பொருட்கள் ரூ.52 லட்சத்துக்கு விற்பனை

Update: 2023-04-12 19:54 GMT

தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் தஞ்சை தாரகைகள் விற்பனை அங்காடிகள் மூலம் மகளிர் சுயஉதவிக்குழு தயாரிக்கும் கைவினைப்பொருட்கள் ரூ.52 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

கைவினைப்பொருட்கள் விற்பனையகம்

தஞ்சை மாநகராட்சி பூ மாலை வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தஞ்சை தாரகைகள் கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடியினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு சிறந்த ஒரு விற்பனை வாய்பினை ஏற்படுத்தி தரும் வகையில் தஞ்சை தாரகைகள் கைவினை பொருட்கள் மதி அங்காடி திறக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு கூடுதல் விற்பனை வாய்ப்பும், கூடுதல் வருவாயும், வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரும் வகையில் ஓர் இலக்குடன் உருவாக்கப்பட்டது.

ரூ.52 லட்சத்துக்கு விற்பனை

அதன்படி தஞ்சை தாரகைகள் கைவினைப்பொருட்கள் அங்காடி முதன்முதலாக பூமாலை வணிக வளாகத்தில் தொடங்கப்பட்டது. இந்த விற்பனை அங்காடியின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடிமனதின் குரல் நிகழ்ச்சியில் பங்குபெற்றது என்ற பாராட்டுதலை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெற்று இதுவரை ரூ.25 லட்சத்து 94 ஆயிரத்து 106-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து தஞ்சை ரெயில் நிலையம், கல்லணை, தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் பகுதி, தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அருங்காட்சியகம் ஆகிய 5 இடங்களில் தஞ்சை தாரகைகள் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுவரை ரூ.51 லட்சத்து 91 ஆயிரத்து 272-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரம் உயர்வதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினர்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் ஆசீர்வாதம், மேலாளர் செந்தில்குமார், தாரகைகள் உற்பத்தி மற்றும் விற்பனை குழு தலைவி மணிமேகலை. ஆலங்குடி ஊராட்சி பஞ்சாயத்து அளவிலான குழு கூட்டமைப்பினர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்