அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்

வரதராஜன்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-17 18:44 GMT

மின் மோட்டாரில் பழுது

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே வரதராஜன்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், மின் மோட்டாரில் ஏற்பட்ட பழுதின் காரணமாக இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் 15 வார்டுகளில் 100-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரியாமல் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதாகவும், துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் தெருக்களில் குப்பைகள் சிதறி மோசமான நிலையில் இருப்பதாகவும், அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டு வருவதால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பெண்கள் மறியல்

இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் வரதராஜன்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதுடன், பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பு பெண்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், பேரூராட்சி தலைவர் மார்க்ரேட் அல்போன்ஸ் மற்றும் கவுன்சிலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பேரூராட்சி செயல் அலுவலர் நேரில் வந்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

கவுன்சிலர்கள் உறுதி

இதையடுத்து பொதுமக்களின் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பதாக போலீசாா் மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த பெண்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்