கோவில்பட்டியில் வீடுவீடாக சென்று மகளிர் உரிமைத்தொகை வினியோகம்
கோவில்பட்டியில் தபால்துறை மூலம் வீடுவீடாக சென்று மகளிர் உரிமைத்தொகை வினியோகம் செய்யப்படுகிறது.
கோவில்பட்டி(மேற்கு):
கோவில்பட்டி பகுதியிலுள்ள ஏராளமான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் இந்தியா போஸ்டு பேமென்டு வங்கியில் கணக்கு தொடங்கினர். அவர்களின் வங்கி கணக்கில் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வரவாகியது. இந்த தொகையை தபால்துறை அதிகாரிகள் அந்தந்த பகுதி தபால்காரரை சம்மந்தப்பட்ட பெண்களின் வீடுகளுக்கு சென்று மணியார்டர் மூலமாக வழங்க ஏற்பாடு செய்தனர். அதன்படி வீடுவீடாக சென்று மகளிர் உரிமைத்தொகையை வழங்கும் பணியில் தபால்காரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடைந்துள்ள பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இந்தியா போஸ்டு பேமென்டு வங்கி தபால்காரர் மூலம் மகளிர் உரிமை தொகை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று தபால் துறை கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் தெரிவித்தார்.