சென்னையில் புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை; சப்-இன்ஸ்பெக்டர் கைது
பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் சப் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
சென்னை,
சென்னை ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பாரதிதாசன் (வயது 55). இவர் புகார் கொடுக்க வந்த பெண் ஒருவரிடம் தோளில் கையை போட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து அந்த பெண் மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனரை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அதன்பேரில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. எந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றினாரோ அதே ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்குப்பதிவோடு நிற்காமல் அவர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. தீவிர விசாரணைக்கு பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.