சாராயம் கடத்திய பெண் ஊராட்சி தலைவர் கைது

கள்ளக்குறிச்சியில் இருந்து விருத்தாசலத் திற்கு சாராயம் கடத்திய பெண் ஊராட்சி தலைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-27 18:45 GMT

விருத்தாசலம்:

கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து சிறுபாக்கம் அருகே உள்ள வடபாதிக்கு சாராயம் கடத்தி வருவதாக விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சக்தி தலைமையிலான போலீசார் சிறுபாக்கம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடபாதியில் சந்தேகத்துகிடமான முறையில் பெண் ஒருவர் சாக்குமூட்டையுடன் நின்று கொண்டிருந்தார்.

தப்பி ஓட்டம்

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்துவதற்காக சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் அந்த பெண் சாக்கு மூட்டையை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினார்.

உடனே போலீசார் விடாமல் பின்னால் துரத்திச்சென்று அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர். மேலும் அவர் வைத்திருந்த சாக்குமூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் 2 லாரி டியூப்களில் சாராயம் இருந்தது தெரியவந்தது.

கள்ளக்குறிச்சியில் இருந்து..

இதையடுத்து அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த மணிவேல் மனைவி கற்பகம்(வயது 27) என்பதும், வடபாதி ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வரும் இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் உள்ள கிராமத்தில் இருந்து சாராயத்தை கடத்தி வந்து பின்னர் அவற்றை வீட்டுக்கு எடுத்து செல்ல முயன்றபோது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது.

பின்னர் கற்பகத்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 லாரி டியூப்களில் இருந்த 60 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். ஊராட்சிக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய பெண் ஊராட்சி மன்ற தலைவரே சாராயத்தை கடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்