குலசேகரம் அருகே மகனுடன் ஸ்கூட்டரில் சென்ற போது விபத்து: பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் சாவு; டிரைவர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

குலசேகரம் அருகே மகனுடன் ஸ்கூட்டரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பஸ் சக்கரத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ் டிரைவர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-31 18:45 GMT

குலசேகரம், 

குலசேகரம் அருகே மகனுடன் ஸ்கூட்டரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பஸ் சக்கரத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ் டிரைவர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாய் இறந்த நிலையில்...

குலசேகரம் அருகே அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஜான் போஸ்கோ (வயது 44), கொத்தனார். இவருடைய மனைவி மரிய கொரட்டி பிறீடா (40). இவர்களுக்கு ஜான் பிஜோ (17), ஜான் பினோ (7) என 2 மகன்கள் உள்ளனர்.

ஜான் போஸ்கோ தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டி வருகிறார். இதனால் அவர்கள் அந்த பகுதியில் உள்ள வேறொரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.

இந்தநிலையில் மரிய கொரட்டி பிறீடாவின் தாய் கடந்த 50 நாட்களுக்கு முன்பு இறந்தார். இதனால் மரிய கொரட்டி பிறீடா திருவட்டார் அருகே மேக்காமண்டபத்தில் உள்ள தாயின் வீட்டில் மகன்களுடன் தங்கி வந்தார்.

பஸ்சில் சிக்கி பெண் சாவு

அதே சமயத்தில் புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபடும் கணவருக்கு அவர் அங்கிருந்து மதிய உணவை எடுத்து வந்து கொடுத்தார். அதன்படி நேற்று மதியம் தனது மூத்த மகன் ஜான் பிஜோவுடன் ஒரு ஸ்கூட்டரில் மரிய கொரட்டி பிறீடா சாப்பாட்டை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஸ்கூட்டரை மகன் ஓட்ட அவர் பின்னால் உட்கார்ந்திருந்தார்.

குலசேகரம் நாகக்கோடு சந்திப்பு அருகே தனியார் மதுபான பார் பகுதியில் சென்ற போது குலசேகரத்தில் இருந்து கருங்கல் நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. இந்தநிலையில் ஜான்பிஜோ ஸ்கூட்டரில் திடீரென பிரேக் போட்டுள்ளார். ஆனால் அவருடைய கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் சாலையில் கவிழ்ந்தது.

அப்போது கீழே விழுந்த மரிய கொரட்டி பிறீடா மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது. மகன் ஜான்பிஜோ லேசான காயமடைந்தார். அந்த சமயத்தில் தாயார் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி உயிருக்கு போராடியதை பார்த்து ஜான்பிஜோ கதறி அழுதார். அய்யோ, என் தாயாருக்கா? இந்த நிலைமை, அவரை காப்பாற்ற வாருங்களேன் என உருக்கமாக அழுதபடி அக்கம் பக்கத்தினரை அழைத்தார்.

உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்து உடல் நசுங்கி காயமடைந்த மரிய கொரட்டி பிறீடாவை மீட்டு சிகிச்சைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொ ண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

சோகம்

மேலும் இதுபற்றி தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் விரைந்து வந்து மரிய கொரட்டி பிறீடாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்கூட்டரில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததால் மகன் கண் எதிரே தாய் பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

டிரைவர்கள் சாலை மறியல்

இதற்கிடையே இந்த விபத்து தொடர்பாக பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று இரவு 9 மணிக்கு திருவட்டார் பணிமனை அனைத்து சங்க டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் குலசேகரம் போலீஸ் நிலையம் முன்பு சாலையில் திரண்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

உடனே இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தார். பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டு சென்றனர். பேச்சுவார்த்தையின் போது உங்கள் தரப்பு சார்பில் மனு எழுதி கொடுங்கள். அதன்படி உரிய விசாரணை நடைபெறும் என டிரைவர்களிடம் இன்ஸ்பெக்டர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்