கார் மோதி பெண் சாவு; 5 பேர் படுகாயம்

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் புதுமனை புகுவிழாவுக்கு சீர்வரிசை எடுத்துச்சென்றபோது கார் மோதி பெண் பரிதாபமாக இறந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-08-20 19:15 GMT

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் புதுமனை புகுவிழாவுக்கு சீர்வரிசை எடுத்துச்சென்றபோது கார் மோதி பெண் பரிதாபமாக இறந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

புதுமனை புகுவிழா

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கனோடை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவர் அந்த பகுதியில் வீடு கட்டி உள்ளார். நேற்று காலை புதுமனை புகுவிழா நடக்க இருந்தது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை வீட்டின் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து உறவினர்கள் சீர்வரிசை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சிங்கனோடை வழியாக காரைக்கால் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சீர்காழி எருக்கூரை சேர்ந்த ஜெயா (வயது55), திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை சேர்ந்த அபிநயா (37), நாகையை சேர்ந்த சித்ரா (55), திருக்கடையூரை சேர்ந்த தனலட்சுமி (65), சிங்கேனாடையை சேர்ந்த சண்முகப்பிரியா (29), எடுத்துக்கட்டி சாத்தனூரை சேர்ந்த அபிராமசுந்தரம் (70) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

பரிதாப சாவு

இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஜெயா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அபிராமசுந்தரம், சித்ரா, தனலட்சுமி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர், நாகை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

டிரைவருக்கு வலைவீச்சு

மேலும் 2 பேர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற கார் டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள். புதுமனை புகுவிழாவுக்கு சீர்வரிசை எடுத்து சென்றபோது நடந்த விபத்தில் பெண் பலியானது அந்த பகுதியை சேர்ந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்