முதியவர்களை ஏமாற்றி நகைகளை திருடிய டிப்-டாப் பெண் கைது

முதியவர்களை ஏமாற்றி நகைகளை திருடிய டிப்-டாப் பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 8 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-01-22 11:29 GMT

டிப்-டாப் பெண்

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராணி (வயது 70). இவர் வீட்டில் தனியாக இருக்கும் போது பேண்ட், சர்ட் அணிந்த டிப்-டாப் பெண் ஒருவர் அவரிடம் முதியோர் ஓய்வு தொகை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி பின்னர் அவர் அணிந்திருந்த தங்க நகையை ஒரு முறை போட்டு பார்த்து விட்டு தருவதாக தெரிவித்து நகையுடன் மாயமானார். இதேபோல் புள்ளரம்பாக்கம் அருகே உள்ள பொன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (55) மற்றும் பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த எல்லம்மாள் (60) ஆகிய 2 பேரிடமும் டிப்-டாப் பெண் ஒருவர் திருடி விட்டு தப்பினார்.

புகார்

இதுகுறித்து சாந்தி, ராணி, எல்லம்மாள் ஆகியோர் ஊத்துக்கோட்டை மற்றும் பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி உத்தரவு பேரில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, ராவ்பகதூர், செல்வராஜ் லோகநாதன் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து அந்த பெண்னை தேடி வந்தனர். இதில் ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை செய்தனர்.

8 பவுன் நகை பறிமுதல்

விசாரணையில் அவர் அம்பத்தூர் அருகே உள்ள கல்யாணபுரம் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராணி (35) என்பதும், இவர் சாந்தி, ராணி, எல்லம்மாள் ஆகியோரை ஏமாற்றி நகைகள் திருடியது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 8 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்தனர். பின்னர் புஷ்பராணியை ஊத்துக்கோட்டையில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்