ஆடுகளுக்கு கருச்சிதைவு ேநாய் தாக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடுகளுக்கு ஏற்படும் கருச்சிதைவு நோயை தடுப்பது குறித்து கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2023-01-05 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடுகளுக்கு ஏற்படும் கருச்சிதைவு நோயை தடுப்பது குறித்து கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நோய்

செம்மறி ஆடுகளில் கருச்சிதைவு நோயால் ஆடு வளர்ப்போருக்கு பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கருச்சிதைவு நோய் பல காரணங்களால் ஏற்படுகிறது. நோய் தொற்று, நைட்ரேட் விஷம், வைட்டமின் பற்றாக்குறை, நீலநாக்கு நோய் என்ற வைரஸ், நுண்ணுயிரிகளால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்நோய் ஏற்படாமல் தடுக்க விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதன்படி நாய், பூனை, பறவைகள் போன்ற பிற விலங்குகளை ஆட்டு மந்தைக்குள் விடக்கூடாது. கருச்சிதைவு ஆன செம்மறி ஆடுகளை தனிமைப்படுத்த வேண்டும். இறந்த ஆட்டுக்குட்டி, நஞ்சுக்கொடி, கையுறைகள் மற்றும் வைக்கோல், படுக்கைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மருத்துவ ஆலோசனை

வயது வந்த ஆடுகளிலிருந்து ஆட்டுக்குட்டிகளை தனிமைப்படுத்த வேண்டும். தடுப்பூசி மூலம் நீலநாக்கு வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியும். நீலநாக்கு தடுப்பூசி கர்ப்பிணி ஆடுகளுக்கு போடக்கூடாது. கருக்கலைப்பு நடந்த பகுதியை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

ஆடு வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி ஆய்வுக்கான மாதிரிகளை சேகரிக்க ஒத்துழைத்து நோய் புலனாய்வு பிரிவு வழியாக உயர் நிலை ஆய்வகங்கள் மூலம் பகுப்பாய்வு செய்து உரிய மருத்துவ ஆலோசனை பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்