ஏற்காட்டில் சுட்டெரிக்கும் வெயிலால் வாடிய மலர்கள்:அலங்கார வளைவுகள் புதிய பூக்களால் அலங்கரிப்பு

Update:2023-05-27 01:20 IST

ஏற்காடு

ஏற்காட்டில் சுட்டெரித்த வெயில் காரணமாக மலர்கள் வாடின. இதனால் அலங்கார வளைவுகள் மற்றும் உருவங்கள் புதிய பூக்களால் அலங்கரிக்கப்பட்டன.

மலர்கள் வாடின

ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 21-ந் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் ஏற்காடு களை கட்டியது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் கோடை விழாவையொட்டி அலங்கார வளைவுகள் மற்றும் பல்வேறு உருவங்களில் அமைக்கப்பட்டிருந்த மலர்கள் வாடின. கோடை விழாவை காண படையெடுத்து வந்த சுற்றுலா பயணிகள் வாடிய மலர்களை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தனர். அதாவது பொன்னியின் செல்வன் படகு நுழைவு வாசலில் பொருத்தப்பட்டிருந்த அலங்கார வளைவு உள்பட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அனைத்து உருவங்களிலும், வாடிய பூக்கள் அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக புதிய மலர்களை கொண்டு நேற்று மீண்டும் அவை அலங்கரிக்கப்பட்டன.

பராமரிப்பு பணி

மேலும் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து மலர்களை வாடாமல் தோட்டக்கலை துறை ஊழியர்கள் பராமரிப்பு பணியை செய்தனர். இதனால் ஏமாற்றத்துடன் இருந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து மலர் கண்காட்சியை கண்டுகளித்தனர். தங்களது செல்போன்களில் செல்பி மற்றும் குழு படங்களையும் எடுத்து கொண்டனர்.

கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவர தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஏற்காடு மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடந்தது.

மலைவாழ் மக்கள் நடனம்

இதில் ஏற்காட்டை சேர்ந்த மலைவாழ் மக்கள் தங்கள் பாரம்பரிய நடனத்தை அரங்கேற்றினர். இசைக்கு ஏற்றாற் போல் மலைவாழ் மக்கள் நடனம் ஆடியது வந்திருந்த சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

இதனிடையே நேற்று மாலை 4 மணி அளவில் கருமேகங்கள் திரண்டு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்ததுடன், குடைகளை பிடித்தவாறு விழாவை கண்டுகளித்தனர்.

மேலும் செய்திகள்