ஜெயவிளங்கி அம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா

அரிமளம் ஜெயவிளங்கி அம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா நடைபெற்றது.

Update: 2023-03-08 19:06 GMT

ஜெயவிளங்கி அம்மன் கோவில்

அரிமளத்தில் பிரசித்தி பெற்ற ஜெயவிளங்கி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த 20-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 24-ந் தேதி அம்மாக்களை அழைத்தலும், 27-ந் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பல்வேறு சமுதாயத்தினரின் மண்டகபடிதாரர்கள் சார்பில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நேற்று மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 16 நாட்கள் விரதம் இருந்து சில்வர், பித்தளை பாத்திரங்களில் தென்னைபாலைகளால் அலங்கரித்த மது குடங்களை எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்து ஜெயவிளங்கி அம்மன் கோவிலில் வைத்து விட்டு சென்றனர்.

மது களைப்பு நிகழ்ச்சி

இதனை தொடர்ந்து பெண்கள் கோவிலில் வைத்த மதுகுடங்களில் பலூன், மலர்கள், கலர் பேப்பர்களால் அலங்காரம் செய்து ஊர்வலமாக எடுத்து சென்று மது களைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மது ஊர்வலமானது ஜெயவிளங்கி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு சின்னபொற்குடையான், சந்தைப்பேட்டை, ஏம்பல் சாலை, சிவன் கோவில் சாலை வழியாக மது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நடைபெறும் மது களைப்பு நிகழ்ச்சியின் போது மது குடங்களில் இருந்த தென்னம்பாளை, நெல் மணிகளை கீழே கொட்டி களைக்கப்பட்டது.

பின்னர் கீழே கொட்டப்பட்ட நெல்லை பொதுமக்கள் ஒரு கைப்பிடியை எடுத்து கொண்டு தங்களது வீட்டிற்கு கொண்டு சென்றனர். இந்த கைப்பிடி நெல்லை வீட்டில் விவசாயத்திற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள விதைநெல்லுடன் கலந்து வைத்து விவசாயம் செய்தால் எதிர்வரும் காலங்களில் விவசாயம் செய்யும் போது அமோக விளைச்சலை தரும் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இந்த வழக்கம் பல ஆண்டுகளாக பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

பால்குடம், காவடி

இதனிடையே பால்குடம், காவடி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை காண சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அரிமளம் ஊர் அம்பலகாரர்கள், கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். அரிமளம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்