அரசியலில் நடிகர் விஜய்யுடன் இணைந்து செயல்படுவீர்களா? சீமான் பதில்

அரசியலில் நடிகர் விஜய்யுடன் இணைந்து செயல்படுவீர்களா? என்ற கேள்விக்கு சீமான் பதில் அளித்துள்ளார்.

Update: 2023-06-18 18:50 GMT

தூத்துக்குடி,

ஏராளமான அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் வரவில்லை என்று அவற்றை மூடும் நிலை உள்ளது. அரசு பள்ளிகளில் போதிய வசதிகளை ஏற்படுத்தி தரம் உயர்த்த வேண்டும். மற்ற நாடுகளில் அரசு நடத்தும் கல்வி, மின்வினியோகம், குடிநீர் வசதி தரமாக இருக்கும்போது, நமது நாட்டில் ஏன் அவை தரமாக இல்லை.

கடலில் சிலை வைக்கவும், மதுபாட்டில்களை பாதுகாக்கவும் வழங்கும் முக்கியத்துவத்தை விவசாயத்தையும், விவசாயிகளின் விளைபொருட்களையும் பாதுகாக்க வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம். அதனை வேறு மாநிலத்துக்கு கொண்டு செல்லட்டும். தாமிரத்தை பற்றி பேசுகிறவர்கள், தண்ணீரைப் பற்றி பேசுவார்களா?

நடிகர் விஜய்

நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலமாக பல ஆண்டுகளாக மறைமுகமாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். ஆனால் நடிகர் விஜய் அரசியலுக்கு வர விரும்புவதால், அதனை வெளிப்படையாக செய்து வருகிறார். படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதை வரவேற்கலாம், பாராட்டலாம். ஓட்டு போட பணம் கொடுக்கவும், வாங்கவும் கூடாது என்ற எனது கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நடிகர் விஜய் பேசியது வரவேற்கத்தக்கது.

நடிகர் விஜய் இவ்வளவு நாள் ஏன் அரசியலுக்கு வரவில்லை? என்று கேட்கக்கூடாது. இந்த தருணத்தில் அவர் அரசியலுக்கு வர விரும்புகிறார். அதனை வாழ்த்துவோம். அவருடன் இணைந்து செயல்படுவீர்களா? என்று கேட்கிறீர்கள். என்னுடைய பாதை வேறு, அவருடைய பாதை வேறு. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். நல்லது செய்வதை தட்டிக் கொடுக்கலாம், தள்ளிவிடக் கூடாது.

திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கு, ஒரு இனத்தை வழி நடத்துவதற்கு தலைவனாக இருப்பதற்கு தகுதியானது என்று கூறுவது அவமானகரமானது. இது மாறாது. எல்லோரும் சேர்ந்துதான் மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாரதியார் சிலைக்கு மாலை

முன்னதாக எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாைத செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்