திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை சீரமைக்கப்படுமா?
மழை காலத்தில் சேறும், சகதியுமாக மாறிவிடும் திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை சீரமைக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கோட்டூர்:
மழை காலத்தில் சேறும், சகதியுமாக மாறிவிடும் திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை சீரமைக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அரசு போக்குவரத்து கழக பணிமனை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பணிமனை கிளை செயல்பட்டு வருகிறது இந்த பணிமனையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இங்கு டிரைவர், கண்டக்டர்கள் 250 பேரும்,அலுவலகப் பணியாளர்கள் 10 பேரும், ஒர்க் ஷாப்பில் 25 பேரும், காவலர்கள், உதவியாளர்கள் உள்பட 800 பேர் பணியாற்றி வருகின்றனர்.
சேறும், சகதியுமாக காணப்படுகிறது
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 5 ஏக்கர் நிலத்தில் இந்த பணிமனை அமைக்கப்பட்டது. தற்போது இந்த போக்குவரத்துமனையில் மண் தரை இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. பள்ளம், படுகுழியாக இருப்பதால் சிறு மழை பெய்தால் கூட சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. மேலும் கோரைப் புல் மற்றும் முள் செடிகளும், கொடிகளும் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் விஷஜந்துகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன.
மழை காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரால் துர்நாற்றம் வீசுகிறது. மழை காலத்தில் சேறும், சகதியுமாக காணப்படுவதால் பஸ்சை நிறுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பணிமனை அலுவலகம் கட்டிடம் பழமை வாய்ந்த கட்டிடம் சேதமடைந்துள்ளதால் அலுவலர்கள் அச்சம் அடைகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
30 பணியிடங்கள் காலியாக இருப்பதால் ஓய்வின்றி பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளனர். இரவு நேரத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்கி ஓய்வு எடுக்க கட்டிடவசதி இல்லை. எனவே திருத்துறைப்பூண்டி போக்குவரத்து கழக பணிமனைக்கு கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு பணிமனையின் மண்தரையில் சிமெண்டு தளம் அமைக்க வேண்டும்.
சேதமடைந்த அலுவலக கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் அல்லது புதிதாக கட்டித்தர வேண்டும். கண்டக்டர், டிரைவர்களுக்கு ஓய்வு அறை மற்றும் கழிவறை. வாகன நிறுத்துமிடம், குடிநீர் வசதிகள் அமைத்து தர வேண்டும். மேலும் திருத்துறைப்பூண்டி பணிமனையில் இருந்து மீண்டும் சென்னை மற்றும் பழனி உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ் இயக்க வேண்டும். டிரைவர்கள், கண்டக்டர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.